

கிரிக்கெட் போட்டி என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல; வீரர்களின் நேர்மை, ஒழுக்கம் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவதும் அதில் முக்கிய மானவை. குறிப்பாக போட்டி நடைபெறும் நேரத்தில் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இருக்கும் குறிப்பிட்ட பகுதிகளில் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் TNPL தொடரில் இளம் தமிழக வீரர் ஒருவர் செல்போன் பயன்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று வரும் TNPL தொடரில், ரஞ்சி கோப்பையில் தமிழக அணிக்காக கடந்த சீசனில் அறிமுகமான இளம் வீரர் ஒருவர், போட்டியின்போது அறிவிக்கப்படாத செல்போனை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் விதிமுறை மீறி ஆகஸ்ட் 10-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற TNPL போட்டியின்போது இந்தச் சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் இருக்கும் Players and Match Officials Area (PMOA) பகுதியில் செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்துச் செல்வது விதிமுறைகளுக்கு எதிரானது. இதுபோன்ற கட்டுப்பாடுகள் போட்டியின் நேர்மையைப் பாதுகாப்பதற்கும், வெளிப்புறத் தொடர்புகள் மூலம் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுப்பதற்கும் கொண்டுவரப்பட்டுள்ளன
இந்த விவகாரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் Anti-Corruption and Security Unit (ACSU) விசாரித்தது. அந்த செல்போனில் சூதாட்டத் தரகர்கள் அல்லது bookmaker-களுடன் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அனுமதியின்றி செல்போனை வைத்திருந்ததே விதிமுறை மீறலாகக் கருதப்பட்டது. இதையடுத்து, வீரருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை முடியும் வரை TNPL அணிகளால் அவரைத் தேர்வு செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீரரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம், கிரிக்கெட்டில் சிறியதாகத் தோன்றும் விதிமுறை மீறல்கள் கூட எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. கடந்த IPL தொடரிலும் இதேபோன்று செல்போன் பயன்படுத்தியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகி ஒருவருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த விதிமுறைகள் ஏன் கடுமையாக உள்ளன என்பதற்குப் பின்னால் முக்கியமான காரணம் இருக்கிறது..போட்டி நடைபெறும் இடத்தில் வீரர்கள் வெளிப்புற நபர்களுடன் தொடர்பு கொண்டு போட்டி தொடர்பான தகவல்களைப் பகிர்வதைத் தடுப்பதே இதன் நோக்கம்.. குறிப்பாக சூதாட்டம் மற்றும் போட்டி முறைகேடுகளைத் தடுப்பதில் Anti corruption and Security Unit முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே ஒரு வீரர் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே செல்போனைப் பயன்படுத்தி இருந்தாலும் அனுமதிக்கப்பட்ட பகுதிக்குள் அறிவிக்கப்படாத செல்போனை வைத்திருப்பது விதிமுறை மீறலாகவே கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இரண்டு ஆண்டுகள் வரை தடை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இது தீவிரமான ஊழல் குற்றமாக நிரூபிக்கப்படாததால் இறுதியில் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. விசாரணை முடிவில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவரும்.
இந்த சம்பவம் வீரர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி நிர்வாகத்திற்கும் ஒரு முக்கியமான பாடமாக அமைந்துள்ளது. போட்டி நடைபெறும் இடத்தில் வீரர்களின் ஒவ்வொரு செயல்பாடும் கண்காணிக்கப் படுவதற்கு இதுபோன்ற விதிமுறைகளே காரணம். குறிப்பாக செல்போன் மூலம் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்வது போட்டியின் ரகசியத் தகவல்கள் வெளியேறுவதற்கும் எதிர்பாராத பிரச்னைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பை உருவாக்க கூடும்.
எனவே தனிப்பட்ட காரணங்களுக்காக செல்போன் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் விதிமுறைகளை மீறியதற்கான நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிறது. இந்த விவகாரத்தில் வீரரின் பெயர் இதுவரை வெளியிடப்படாத நிலையில் TNCA வின் இறுதி விசாரணை முடிவுக்குப் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும் . இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க வீரர்களுக்கு விதிமுறைகள் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
மைதானத்தில் திறமைக்கு இணையாக ஒழுக்கமும் முக்கியம். வீரர்கள் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலமே கிரிக்கெட்டின் மீதான ரசிகர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும். செல்போன் பயன்படுத்திய இந்தச் சம்பவத்தில் சூதாட்டத் தொடர்பு இல்லை என்றாலும், விதிமுறைகளை மீறியதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இந்த நடவடிக்கை மற்ற வீரர்களுக்கும் ஒரு முக்கியமான எச்சரிக்கையாக அமையும்.
இதன் மூலம் போட்டியின்போது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் செல்போனை பயன் படுத்தக்கூடாது என்ற விதிமுறை தெளிவாகிறது. வீரர்களின் ஒழுக்கம் மற்றும் போட்டியின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதே இதுபோன்ற கட்டுப்பாடுகளின் முக்கிய நோக்கமாகும்.
கிரிக்கெட் விளையாட்டின் வெளிப்படைத்தன்மை மற்றும் வீரர்களின் ஒழுக்க விதிகள் குறித்த தொழில்நுட்ப அளவிலான புரிதலை இந்த கட்டுரை வழங்கும்.