தங்கத்தை தவறவிட்டாலும் இந்தியாவின் இதயங்களை வென்ற 15 வயது சிறுமி..! யார் இந்த தன்வி பத்ரி!

15 வயதில் வெள்ளிப் பதக்கம்! வரலாற்றுச் சாதனை படைத்த தன்வி பத்ரி!
Tanvi Patri
Tanvi Patri source:https://openthemagazine.com/
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

தங்கத்தைத் தவறவிட்டாலும் இந்தியாவின் இதயங்களை வென்றிருக்கிறார் இந்த இளம் சாதனைப் பெண்!

விளையாட்டில் வெற்றி, தோல்வி இரண்டும் இயல்பானவை. ஆனால் தோல்வியின் விளிம்பில் நின்றும் போராடும் மன உறுதிதான் ஒரு வீரரைச் சாதனையாளராக மாற்றுகிறது. அப்படியொரு அசாத்தியமான போராட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் 15 வயதே ஆன இளம் பேட்மிண்டன் வீராங்கனை தன்வி பத்ரி. செனகல் நாட்டின் டக்கார் நகரில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் அவர் நிகழ்த்திய சாதனையைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தன்வி பத்ரி, சிறுவயதிலிருந்தே பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தற்போது பெங்களூருவில் உள்ள பிரகாஷ் படுகோன் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த ஆண்டு ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் 15 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் பட்டம் வென்று தனது திறமையை ஏற்கெனவே நிரூபித்திருந்தார்.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் யுசுனோ வதனாபேவை எதிர்கொண்டார். முதல் செட்டைக் கைப்பற்றிய தன்வி, இரண்டாவது செட்டில் தோல்வியடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் மூன்றாவது செட்டில் 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். இதன் மூலம் இளைஞர் ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

Tanvi Patri
Tanvi Patrisource:india today

இறுதிப்போட்டியில் சீனாவின் உலக ஜூனியர் சாம்பியனான ஜாங் யி ஜின்னை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதிச் செட்டில் 10-19 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கியிருந்தபோதும் தன்வி மனம் தளரவில்லை. அடுத்தடுத்த புள்ளிகளைக் கைப்பற்றி 24-24 என்ற நிலைக்குப் போட்டியைக் கொண்டு வந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பு கைநழுவியது. இதனால் வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தார்.

தன்வியின் இந்த வெற்றி இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு எச்.எஸ். பிரணாய், லக்ஷ்யா சென் போன்ற வீரர்கள் இளைஞர் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்றுள்ளனர். தற்போது மகளிர் ஒற்றையர் பிரிவிலும் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் தன்வி.

தன்வியின் இந்த வெற்றிக்குப் பின்னால் பல ஆண்டுகால உழைப்பும், கடுமையான பயிற்சியும் இருக்கின்றன.. பேட்மிண்டன் விளையாட்டில் வேகம் மட்டுமே வெற்றியைத் தீர்மானிப்பதில்லை.எதிராளியின் அடுத்த நகர்வைக் கணிப்பது, சரியான நேரத்தில் ஷாட்டுகளை அடிப்பது , மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைந்து செல்வது எனப் பல நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன ..

இத்தகைய திறமைகளைத் தனது இளம் வயதிலேயே தன்வி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.. குறிப்பாக இறுதிப் போட்டியில் பின்தங்கிய நிலையில் இருந்து 24_24 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தது அவரது மன உறுதிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு..வெற்றியை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் ஒரு சிறந்த விளையாட்டு வீரருக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பாகும்..

இந்த வெள்ளி பதக்கம் தன்விக்கு இன்னும் பெரிய சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான நம்பிக்கையையும் அனுபவத்தையும் வழங்கும்.. எதிர்காலத்தில் சீனியர் பிரிவிலும் இந்தியாவுக்காகப் பல பதக்கங்களை வெல்லும் திறமை அவரிடம் உள்ளது.. சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு, ஊக்கம் ஆகியவை தொடர்ந்து கிடைத்தால் இந்திய பேட்மிண்டனின் எதிர்காலம் மேலும் பிரகாசமாக இருக்கும்..

தன்வியின் விளையாட்டுப் பயணத்தில் சீனாவுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.

தந்தையின் பணி காரணமாகச் சிறு வயதில் சீனாவில் வசித்த போது அங்கேயே பேட்மிண்டனின் அடிப்படைப் பயிற்சிகளக் கற்றுக் கொண்டார்.2024 ல் ஆசிய U _15 பட்டத்தையும்,2026 ல் ஆசிய U_ 17 பட்டத்தையும் வென்றுள்ளார்.. மேலும் இந்த ஆண்டு இந்தோனேசியாவின் பொந்தியானாக் நகரில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியிலும் தனது முதல் சீனியர் பட்டத்தை வென்று கவனம் ஈர்த்துள்ளார்..

தன்வியின் சிறப்பம்சம் அவரது துல்லியமான ஷாட்களும், மின்னல் வேகமான கால் நகர்வுகளும் ஆகும்.. பயிற்சியின் போது எதிர்பாராத சூழல்களையும் உருவாக்கி, அதற்கேற்ப விளையாட அவருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.. இந்த அனுபவங்கள் எதிர்கால சர்வதேசப் போட்டிகளில் அவருக்கு பெரிதும் கைகொடுக்கும்..

தன்வியின் பயிற்சியில் மைதானத்தின் காற்றோட்டத்தால் ஷட்டில் செல்லும் வேகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் கணக்கில் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.. இதனால் வெவ்வேறு மைதானச் சூழல்களிலும் தன்னை விரைவாக மாற்றிக் கொண்டு விளையாடும் திறனை அவர் வளர்த்துக் கொண்டுள்ளார்..

தங்கம் கிடைக்கவில்லை என்பதற்காகத் தன்வியின் சாதனை சிறியதாகிவிடாது. 15 வயதில் உலக அரங்கில் இந்திய மூவர்ணக் கொடியைப் பெருமையுடன் உயர்த்திய இந்த இளம் வீராங்கனையின் பயணம் இன்னும் பல உயரங்களைத் தொடட்டும்!

இதையும் படியுங்கள்:
​உங்கள் கையில் கட்டினால் எல்லோருடைய பார்வையும் உங்கள் மீதுதான்! அப்படி ஒரு அசத்தல் வாட்ச் டிசைன்கள்!
Tanvi Patri