
சினிமாவிற்கு அடுத்தபடியாக கிரிக்கெட்டிற்கு தான் அதிகளவு ரசிகர்கள் உள்ளனர். அதிலும் ஐபிஎல் கிரிக்கெட்டை வெறித்தனமாக பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அதேபோல் இந்திய கிரிக்கெட்டில் ரசிகர் சண்டைகள் என்பது அசாதாரணமானது அல்ல. அவ்வப்போது, ஒரு கிரிக்கெட் வீரரின் ரசிகர் குழுக்கள் மற்ற கிரிக்கெட் வீரர்களின் ரசிகர் குழுக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்தியாவில், கிரிக்கெட் வீரர்கள் கடவுள்களைப் போன்றவர்கள், வீரர் மற்றும் விளையாட்டு மீது ஈடு இணையற்ற ஆர்வத்தை வெளிப்படுத்தும் ரசிகர் படைகள் உள்ளன. இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மிகவும் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். தற்போது 'உண்மையான ரசிகர்கள்' கொண்ட ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் முன்னாள் இந்திய கேப்டன் சென்னை சூப்பர் கிங்ஸின் 'தல' எம்.எஸ்.தோனி மட்டுமே என்று அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ‘தல’ தோனி இந்திய அணிக்காக மூன்று ஐ.சி.சி. உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேசகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஆனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத சென்னை அணி, ஏற்கனவே பிளே-ஆஃந்ப் வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணியின் கேப்டர் ‘தல’ தோனிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கிரிக்கெட் போட்டியை பார்க்க வரும் கூட்டத்தை விட தோனியை பார்க்க வரும் கூட்டம் தான் அதிகமாக இருக்கும். அவர் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும், ரன் அடித்தாலும், ரன் அடிக்காவிட்டாலும், அவரை மட்டும் பார்த்தால் போதும் என்னும் ரசிகர்கள் தான் அதிகம். அத்துடன் அவர் களமிறங்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கும் அளவிற்கு இருக்கும்.
தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை போன்றே விராட் கோலிக்கும் உலகமெங்கும் ரசிகர்கள் உண்டு. அந்தவகையில் ஐபிஎல் தொடரில் தோனியின் சிஎஸ்கே மற்றும் விராட் கோலியின் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் ஆகிய இந்த மூன்று அணிகளுக்கு பெருமளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. முன்பெல்லாம் இதில் ஒரு அணியை மற்றொரு அணி தோற்கடித்தால் சாதாரண கேலி கிண்டல் மட்டும்தான் ரசிகர்களுக்குள் நடைபெறும்.
ஆனால் அதுவும் ரசிக்கும்படி தான் இருக்கும். ஆனால் தற்போது சிஎஸ்கே, ஆர்சிபி ரசிகர்களுக்கு இடையே நடைபெறும் மோதல் மிகவும் கடுமையாக வன்மமாக மாறி வருகிறது. இது ஒரு விளையாட்டு என்பதையும் ரசிகர்கள் மறந்து விட்டு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜியோஸ்டாரில் நடந்த ஒரு அரட்டையின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ஜாம்பவான் 'தல' எம்.எஸ்.தோனி, தற்போது 'உண்மையான ரசிகர்கள்' கொண்ட ஒரே இந்திய வீரர் என்றும், மற்றவர்கள் ரசிகர் படைகளுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹர்பஜனும் தோனியும் 2004 முதல் 2016 வரை இந்தியாவுக்காக விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அணியில் இருந்தனர். ஹர்பஜன் பல சந்தர்ப்பங்களில் தோனி குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளார், ஆனால் இந்த முறை, தோனியுடன் தொடர்புடைய ஒரு நேர்மறையான கருத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
இதுவரை டி20 போட்டிகளில் தோனி கண்ணியமாகத் தெரிகிறார் என்று ஹர்பஜன் மேலும் கூறினார். டி20 போட்டியின் 12 போட்டிகளில் பங்கேற்ற 43 வயதான தோனி 140.62 ஸ்ட்ரைக் ரேட்டில் 180 ரன்கள் குவித்துள்ளார்.
ரசிகர்கள் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவருக்கு உண்மையான ரசிகர் பட்டாளம் இருப்பதாக நான் உணர்கிறேன். மீதமுள்ளவர்கள் அனைவரும் சமூக வலைதளத்தை சார்ந்துள்ளார்கள். இதற்கு மேல் நாம் பேச வேண்டாம். ஏனென்றால் நாம் அதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினால் விவாதம் வேறு திசையில் செல்லும் என்று கூறினார்.
ஹர்பஜன் சிங்கின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த உரையாடலில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஹர்பஜனிடம் 'இவ்வளவு உண்மையை' பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் சிஎஸ்கே விளையாட இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன, மேலும் தோனி தலைமைத்துவம் மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், இது மஞ்சள் படை போட்டியை நேர்மறையான முறையில் முடிக்க உதவும். 12 போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள தோனியும் அவரது சிஎஸ்கே அணியும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கி முதல் முறையாக ஆர்சிபி அணியிடம் ஒரே சீசனில் இரண்டு முறை சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.