ஐரோப்பாவில் கால்பந்து மேல் அதீத பிரியம் வெறி என்று கூட சொல்லலாம். இந்தியாவில் கோடான கோடி மக்கள் கிரிக்கெட் என்றால் வாயை பிளப்பார்கள். அப்படி கிரிக்கெட் மோகம் நம் நாட்டில் உள்ளது. ஸ்பான்ஸர்ஸ் கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிகமாக முன் வருகிறார்கள்.
இந்தியா ஒலிம்பிக்கில் ஹாக்கியில் தங்க பதக்கம் பெற்றும் ஹாக்கியை யாரும் அவ்வளவு விரும்புவது இல்லை. ஸ்பான்ஸர்ஸ் கிடைப்பதும் அரிது. இது மிகவும் மோசமான நிலை.
வடகிழக்கு பகுதியில் பெங்கால்… மற்றும் கேரளாவில் கால்பந்து விளையாடுபவர்கள் அதிகம். ஆனால், அரசோ அல்லது தனியாரோ அதை ஆதரிப்பது இல்லை.
இது மட்டுமின்றி… எந்த தடகள வீரருக்கும, வீராங்கனைக்கும் அரசு பயிற்சி அளிப்பது இல்லை. நமது கிராமங்களில் பல இளைஞர்கள் திறமையோடு இருக்கிறார்கள். அவர்களை கண்டுகொள்ள யாரும் இல்லை. வெற்றி பெற்றால் அவர்களுக்கு பரிசு மற்றும் பணம் அரசு தருகிறது. இது யாருக்கு வேண்டும்? கிராமம் மற்றும் நகரங்களில் திறமை உள்ள விளையாட்டு வீரர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்க வேண்டும்.
1949ல் தான் சீன மக்கள் குடியரசு தோன்றியது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒலிம்பிக்கில் அதிக தங்க பதக்கம் பெறுகிறது. அதிலும் பெண்களின் சாதனைகளை இந்த உலகம் மறக்க முடியாது. குறுகிய காலத்தில் சீனா குறிப்பாக பெண்கள் ஒலிம்பிக்கில் சாதனை செய்வது இந்த உலகம் அறிந்த விஷயம். இது எப்படி சாத்தியம் ஆனது..? சீன அரசு விளையாட்டு வீரர்களை கவனித்துகொண்டு பயிற்சியும் அளித்தது. சீன பெண்கள் தங்க பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்தியாவில் எதிலும் ஊழல். விளையாட்டு துறையிலும் அது மிதமிஞ்சி இருக்கிறது. வீரர்களுக்கு சரியான பயிற்சி இல்லை. இதில் பாலியல் வன்முறை நிகழ்வுகள் வேறு. கால்பந்து, பூ பந்து, வாலி பால், கூடைப்பந்து, என்று வெளியே நடக்கும் போட்டிகள் ஆனாலும் அல்லது உள் அரங்க விளையாட்டுகள்… டேபிள் டென்னிஸ், சதுரங்கம் என எல்லா விளையாட்டுகளிலும் சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர்.
அவர்களை யாரும் உற்சாகபடுத்துவது இல்லை. அரசும் ஒன்றும் பெரியதாக செய்யவில்லை. உலகில் உள்ள சிறு நாடுகள்கூட பதக்கங்கள் பெறும்போது 100 கோடி மக்கள் இருக்கும் இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வாங்கவே திணறுகிறது.
நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களை விளையாட அனுமதிப்பதில்லை. இந்த போக்கு மிகவும் மோசமானது. அதிக அளவில் பெண்கள் விளையாட்டை தங்கள் தொழிலாக எடுத்து செயல்பட வேண்டும். ஆண்களும் இடைவிடாது பயிற்சி செய்து ஆயத்தம் ஆக வேண்டும்.
வீட்டில் உள்ள பெரியவர்களும் விளையாட்டு வீரர்களை உற்சாகம் படுத்த வேண்டும். இளைஞர்கள் அரசு வேலை பெற வேண்டும் என்று இல்லாமல் தமது தொழிலாக விளையாட்டை தேர்வு செய்து பயிற்சி பெற வேண்டும். பெண்களும் முன் வர வேண்டும். எல்லா விளையாட்டுகளையும் ஊக்குவிக்க வேண்டும். வீரர்கள், வீராங்கனைகளை அரசு தேர்வு செய்து அவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்க வேண்டும்.
முடிவாக… விளையாட்டை நேசிப்போம்… ! வீரர்கள், மற்றும் வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவோம். நமது இலக்கு தங்க பதக்கமே..!