இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால், அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்காது என்று முன்னாள் இந்திய வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "ஜோ ரூட் போன்ற வீரர்களைப் பற்றி நாம் பேசும்போது அது வேறு. ஆனால், சமீபத்தில் ஓய்வு பெற்ற கோலி மற்றும் ரோஹித் இல்லாமல் இந்தியா சிறப்பாகவே விளையாடியுள்ளது. சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் ஜாம்பவான்கள் வரிசையில் முதலிடத்திற்கு வர வாய்ப்புள்ளது. நான் இதை எதிர்க்கப் போவதில்லை" என்றார்.
மேலும், அவர் தனது கருத்தை வலுப்படுத்தும் விதமாக, "ரோஹித் சர்மா கடைசியாக விளையாடிய இரண்டு தொடர்களில் சராசரியாக 10 ரன்களும், விராட் கோலி கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 30 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளனர். அவர்களின் இடத்தை நிரப்புவது எளிது கிடையாதுதான். ஆனால், அவர்கள் ஓய்வு பெறுவது இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு அல்ல. இது வெறும் இரண்டு சீனியர் வீரர்களின் இழப்பு மட்டுமே, பங்களிப்பின் இழப்பு கிடையாது. ஏனெனில், அவர்களிடமிருந்து பெரிய பங்களிப்பு எதுவும் இல்லை." என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
மஞ்ச்ரேக்கரின் இந்தக் கருத்து, ஒருபுறம் இளம் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும், மறுபுறம் அனுபவமிக்க வீரர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது. எனினும், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் அணி நிர்வாகம், எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுப்பதில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கோலி மற்றும் ரோஹித்தின் எதிர்கால முடிவு எதுவாக இருந்தாலும், இந்திய கிரிக்கெட் தொடர்ந்து தனது பயணத்தை தொடரும் என்பதில் சந்தேகமில்லை.