

கிரிக்கெட் டெஸ்ட் மேட்சுக்களில் ஆச்சரியம் கலந்த நிகழ்வுகள் நடை பெறும்.அப்படிப் பட்ட ஒரு டெஸ்ட் பற்றி இங்கு காண்போம்.இந்த டெஸ்டில் 99 ரன்கள் ஆதிக்கம் செய்தன.
இரண்டு அணிகளிலும் பேட்டிங்கில் ஒரு வீரர் கூட சதம் பதிவு செய்யவில்லை, வாய்ப்புக்கள் மிகவும் நெருங்கி வந்த போதும் நழுவ விட்டதே அரிய சாதனையில் ஒரு பகுதியாகும்.இந்த டெஸ்ட் நான்கு 99 ரன்கள் நிகழ்வுகளை தனி தனியாக படைத்தது.கிரிக்கெட் சரித்திரத்தில் இந்த ஒரே ஒரு முறை மட்டும் தான் இந்த நிகழ்வு நடைப் பெற்றுள்ளது.
1973 ல் டோனி லேவிஸ் தலைமையில் ஆன இங்கிலாந்து அணி சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தானில் மூன்று டெஸ்டுக்கள் ஆடின.
கராச்சியில் நடைப் பெற்ற மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடி 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 445 ரன்களுடன் தங்கள் முதல் இன்னிங்சை டிக்ளர் செய்தது.இங்கிலாந்து அணியும் பேட்டிங்கில் சோடைப் போகவில்லை. 386 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகினர்.
இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணியினர் அவ்வளவு சிறப்பாக பேட்டிங் ஆடவில்லை. 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர்.முடிவு பெற்ற இந்த மூன்று இன்னிங்ஸ்களுக்குள் தான் அந்த ஆச்சரிய நிகழ்வான 99 ரன்கள் மழை நிகழ்வுகள் அரங்கேறின.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்து சதத்தை நெருங்கிய பாகிஸ்தான் அணி கேப்டன் மஜித் கான் அவுட் ஆனார். அவர் சதம் எடுக்க தேவையாக இருந்தது 1 ரன் மட்டுமே. அவர் 99 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார். போகாக் வீசிய பந்தில் அமிஸ் கேட்ச் பிடித்தார். மஜித் கான் எட்டு பவுண்டரிகள் எடுத்தார்.
இவருடன் சேர்ந்து பேட்டிங் ஆடி வந்த முஷ்டாக் முஹம்மது சதம் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தேவையான ஒரு ரன் எடுக்க ஓடினார். இவர் அவுட் ஆனது ரன் அவுட் முறையில். அந்த தருணத்தில் பதட்டம் அடையாமல் இருந்து இருந்தால் முஷ்டாக் முஹம்மது சதத்தை கோட்டை விட்டுயிருக்க மாட்டார்.
இவர் 10 பவுண்டரிகள் அடித்திருந்தார். இவரும் அவுட் 99 ரன்களுக்கு.ஆக அந்த தருணத்தில் இந்த டெஸ்ட் இரண்டு வீரர்கள் தலா 99 ரன்களுக்கு அவுட் ஆவதை காண நேரிட்டது.பல வீரர்கள் பல் வேறு டெஸ்டுக்களில் 99 ரன்களுக்கு அவுட் ஆகி இருந்தாலும், இரண்டு தனி தனி வீரர்கள் 99 ரன்களுக்கு அவுட் ஆனது இதுவே முதல் முறை, ஒரே டெஸ்டில்.மேலும் அசத்தும் வண்ணமாக இங்கிலாந்து அணியின் இரண்டு வீரர்கள் இதே டெஸ்டில் 99 ரன்களில் இடம் பெற்று சாதனை புரிந்தனர்.
இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் 14 பவுண்டரிகள் அடித்து சதம் அடிக்க தயாராக (தேவை ஒரு ரன் ) இருக்கும் சமயத்தில் பாகிஸ்தான் பவுலர் இன்டிகாப் ஆலம் வீசிய பந்தை அடிக்க போய் அதில் அவர் கொடுத்த கேட்சை சர்பிராஸ் நவாஸ் பிடிக்க , டென்னிஸ் அமிஸ் அவுட் ஆனார் 99 ரன்கள் எடுத்த நிலையில்.
மொத்தம் தலா ஒரு ரன் எடுக்க முடியாமல் எடுத்த 99 ரன்களுடன் அவுட் ஆனார்கள் இந்த மூன்று பேட்ஸ்மன்களும். அதுவும்.ஒரே டெஸ்டில்.இது போதாது என்று முன்னதாக பாகிஸ்தான் பேட்டிங் ஆடும் பொழுது முதல் இன்னிங்சில் பவுலிங் செய்த இங்கிலாந்து பவுலர் நார்மன் கிப்போர்ட் இரண்டு விக்கெட்டுக்கள் எடுத்து விட்டு கொடுத்த ரன்கள் எண்ணிக்கை 99.
ஆக மொத்தம் இந்த ஒரே டெஸ்டில் பேட்டிங் மூன்று வீரர்கள் மற்றும் பவுலிங்கில் ஒரு வீரர் என 99 ரன்கள் எடுத்து, கொடுத்து சாதனை பட்டியலில் இடம் பெற்றனர்.இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்
ஸ்கோர் ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் இருந்த பொழுது டெஸ்ட் டிராவில் முடிவு பெற்றது.
இந்த நான்கு 99 ரன்கள் போதாது என்று பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸ் மொத்த ரன்கள் 199 வேறு 99 ரன்கள் மழையில் முத்தய்ப்பாய் மிளிர்ந்தது.