
உலகளவில் மிகவும் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தான் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஆண்டுதோறும் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் மேடையாக ஐபிஎல் தொடரைப் பயன்படுத்தி வருகின்றனர். கிரிக்கெட்டில் ஒரு வீரரின் தனிப்பட்ட சாதனைகள் பெருமளவில் பேசப்படும். சிலசமயம் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்களைக் குவிக்கும் வீரர்களின் சாதனைகளும் பாராட்டப்படும்.
கிரிக்கெட்டில் ஒரு வீரர் நன்றாக விளையாடினால், அவரது தனிப்பட்ட சாதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் பார்ட்னர்ஷிப் சாதனைகளைப் பொறுத்தவரை இரண்டு வீரர்களுமே நன்றாக விளையாட வேண்டியது அவசியம். அதிலும் தொடக்க வீரர்களாக களமிறங்கும் ஜோடி, நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்துக் கொடுத்தால் தான் பின்வரிசையில் இறங்கும் வீரர்கள் அதிரடியாக ரன்களைக் குவிக்க முடியும்.
அவ்வகையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு சீசனில் பார்ட்னர்ஷிப் மூலம் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 தொடக்க ஜோடிகளை இப்போது பார்ப்போம்.
1. சாய் சுதர்ஷன் - சுப்மன் கில்:
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்கம் முதலே ரன் வேட்டையைத் தொடங்கினர். அதே வேகத்தில் இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருவதால் நடப்புத் தொடரில் மட்டும் 839 ரன்களை பார்ட்னர்ஷிப் மூலம் குவிந்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஜோடி குவித்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுதான். இன்னும் ஐபிஎல் தொடர் முடிவடையாத நிலையில் இந்த ரன் எண்ணிக்கை மேலும் உயரும்.
2. ஷிகர் தவான் - பிரித்வி ஷா:
2021 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். அபாரமாக செயல்பட்ட இருவரும் பார்ட்னர்ஷிப் மூலம் 744 ரன்களைக் குவித்தனர். 4 ஆண்டுகளாக இருந்த இவர்களின் சாதனையைப் தான் சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மன் கில் ஜோடி தற்போது தகர்த்தது.
3 & 4. மயங்க் அகர்வால் - கே எல் ராகுல்:
2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மயங்க் அகர்வால் மற்றும் கே எல் ராகுல் ஜோடி, 671 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடி, அதற்கடுத்த சீசனிலும் (2021) பஞ்சாப் அணிக்காக 602 ரன்களைக் குவித்தது. இந்தப் பட்டியலில் இரண்டு முறை இடம்பெற்ற தொடக்க ஜோடி இவர்கள் தான்.
5. விராட் கோலி - தேவ்தத் படிக்கல்:
2021 ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி சீசன் முழுவதும் தொடக்க விக்கெட்டுக்கு மட்டும் 601 ரன்களைக் குவித்தது. நடப்பு சீசனிலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டி20 மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், கோலியின் ஆட்டத்திறன் மட்டும் இன்னும் குறையவில்லை.
2021 ஐபிஎல் தொடரில் மட்டும் டெல்லி, பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி உள்ளனர் என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இருப்பினும் அந்த ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.