
நவீன கால கிரிக்கெட்டில் டி20 போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் வெகு விரைவிலேயே பிரபலமடைந்து விட்டன. இதற்கு ஐசிசி தொடர்களைக் காட்டிலும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் தான் முக்கிய காரணம் என்றே சொல்ல வேண்டும். ஐபிஎல் தொடர் அறிமுகமான பின்பு தான், டி20 போட்டிகளின் அடையாளமே மாறியது. ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து பல நாடுகளில் டி20 தொடர்கள் அறிமுகமாகின. இதனால் வீரர்களுக்கு பல டி20 தொடர்களில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு பல நாட்டு வீரர்கள் நட்புறவுடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.
உலகளவில் சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளையும் சேர்த்து அதிக போட்டிகளை விளையாடிய வீரர்கள் வெகு சிலர் தான். சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் தொடரைத் தவிர்த்து இந்திய வீரர்கள் மற்ற டி20 தொடர்களில் பங்கேற்பதில்லை. இதனால் இந்தப் பட்டியலில் டாப் 5 இடங்களில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்டர் தான் உலகளவில் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரராக ஜொலிக்கிறார். இதுமட்டுமின்றி டாப் 5 இடங்களில் 4 வீரர்கள் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர் கைரன் பொல்லார்டு. இவரது அதிரடியான பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணிக்கு வில்லனாகத் திகழ்ந்தார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தாலும், மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். இதுவரை மொத்தமாக 700 டி20 போட்டிகளில் விளையாடி வரலாற்றுச் சாதனையைப் படைத்து முதலிடத்தில் இருக்கிறார் பொல்லார்டு.
2. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி, தற்போது ஓய்வு பெற்றுள்ள டுவைன் பிராவோ உலகம் முழுக்க 582 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவரும் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. பௌலிங் மற்றும் பேட்டிங்கில் அசத்திய பிராவோ இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
3. உலகளவில் அதிக டி20 போட்டிகளை விளையாடியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக். இவர் சுழற்பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். இதுவரை மொத்தம் 557 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
4. கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் அதிரடி ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்ஸல், 556 டி20 போட்டிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார்.
5. கொல்கத்தா அணியில் பௌலராக இருந்து தொடக்க வீரராக களமிறங்கி பேட்டிங்கில் அசத்தி வருபவர் சுனில் நரைன். இவரது பேட்டிங் திறன் வெளிவந்ததற்கு முக்கிய காரணமே கவுதம் கம்பீர் தான். சுனில் நரைன் இதுவரை 551 டி20 போட்டிகளில் விளையாடி 5வது இடத்தில் இருக்கிறார்.
அதிக டி20 போட்டிகளில் விளையாடிய டாப் 5 வீரர்கள் அனைவருமே ஆல்ரவுண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக 4 வீரர்கள் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்தவர்கள். அவ்வகையில் சர்வதேச போட்டிகளைக் காட்டிலும் பிரான்சைஸ் டி20 போட்டிகளில் விளையாட வீரர்கள் ஆர்வம் காட்டுவது தெளிவாகத் தெரிகிறது.