
அதிரடியான டி20 கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், இன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. களத்தில் பேட்ஸ்மேன்களின் செயல்பாடு மட்டுமின்றி பௌலர்களின் பந்துவீச்சும் டெஸ்ட் போட்டிகளில் ரசிக்கும் படியாக உள்ளது. பேட்ஸ்மேன்களின் உதவியால் இந்தியா வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகள் ஏராளம். அதேபோல் தோல்வியின் விளிம்பில் இருந்தும் கூட பௌலர்கள் இந்தியாவின் பக்கம் வெற்றியைத் திருப்பிய போட்டிகள் சில தான். அதில் மிகக் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்ற டாப் 5 போட்டிகளை இப்போது காண்போம்.
1. நடப்பாண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியை வெறும் 6 ரன்களில் வென்றது இந்தியா. இப்போட்டியின் வெற்றியில் பந்துவீச்சாளர்களின் பங்கு அளப்பரியது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 374 ரன்கள் இலக்கைத் துரத்திய இங்கிலாந்து, 367 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இப்போட்டியில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். கடைசி வரை யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பில் பரபரப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், கடைசி விக்கெட்டை முகமது சிராஜ் எடுத்து இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
2. கடந்த 2004இல் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 99 ரன்கள் பின்தங்கிய நிலையில், 107 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 93 ரன்களில் ஆல்அவுட் ஆனது அவுஸ்திரேலியா. இதன்மூலம் 13 ரன்களில் த்ரில் வெற்றியைப் பெற்றது இந்தியா.
3. 1972இல் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்டில், இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ஆனால் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து.
4. 2018இல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் 323 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்தியது ஆஸ்திரேலியா. இருப்பினும் இந்திய பௌலர்களின் துல்லியமான பந்துவீச்சால் 291 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இதன்மூலம் 31 ரன்களில் இந்தியா த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
5. 2002இல் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 313 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் சதமடித்திருந்தார். இரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த விவிஎஸ் லட்சுமணன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.