
ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றால் பலருக்கும் ஆடம் கில்கிறிஸ்ட் பெயர் தான் நினைவுக்கு வரும். இவரது அதிரடியான ஆட்டமும், விவேகமான விக்கெட் கீப்பிங் திறமையும் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தது. தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் விளையாடி வரும் டிராவிஸ் ஹெட், தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் கில்கிறிஸ்ட்டை நினைவுப்படுத்துகிறார். கில்கிறிஸ்ட் அளவிற்கு டிராவிஸ் ஹெட் அப்படி என்ன தான் செய்தார்! வாங்க தெரிந்து கொள்ளலாம்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டிராவிஸ் ஹெட் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். பயமின்றி விளையாடுவதே இதற்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான ஆட்டம் தான் ஆஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்தது.
தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்டில் டிராவிஸ் ஹெட் சதமடித்து, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவினார். இவரது அதிரடி ஆட்டம் தான் இன்றைய கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்பெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால், இன்று இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆம், இதன் காரணமாகவே பல டெஸ்ட் போட்டிகள் 5 நாட்களுக்கு முன்பாகவே முடிந்து விடுகின்றன.
எந்தப் போட்டியாக இருந்தாலும், எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் அதிரடியாக மட்டுமே விளையாடுவேன் என்ற எண்ணம் கொண்டவர் டிராவிஸ் ஹெட். அதற்கேற்ப அவர் ரன்களையும் குவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் இவரது ஆட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. நடப்பாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய டிராவிஸ் ஹெட், முழுக்க முழுக்க அதிரடியாக மட்டுமே விளையாடி ரன்களைக் குவித்தார். இவரது ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், டிராவிஸ் ஹெட் விளையாடுவதைப் பார்க்கும் போது ஆடம் கில்கிறிஸ்ட் விளையாடுவதைப் போன்றே இருக்கிறது என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஹெட் சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக மாறி வருகிறார். உலகக்கோப்பை, ஆஷஸ் மற்றும் பார்டர் கவாஸ்கர் தொடர் உள்பட பல முக்கியமான போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனித்து நிற்கிறார். இவர் கிட்டத்தட்ட ஆடம் கில்கிறிஸ்ட் மாதிரியே விளையாடுகிறார். கில்கிறிஸ்ட் 6 அல்லது 7வது இடத்தில் இறங்குவார். ஆனால் ஹெட் சற்று முன்னதாக 5வது இடத்தில் இறங்குகிறார். இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதால், இருவரது ஆட்டமும் அதிரடியாக ஒரே மாதிரி இருக்கிறது. ஹெட் விளையாடும் விதம் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. இவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாடும் மனப்பான்மை தான், இவரது ரன் குவிப்புக்கு காரணமாக இருக்க வேண்டும். அவர் செய்யக்கூடிய எல்லாவற்றிலும் நேர்மறையான விஷயங்களையே பார்க்கிறார்” என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.