

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, தற்போது 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவிற்கு சென்றுள்ளது. இன்று மாலை 4.30 மணி அளவில் ஹராரேவில் உள்ள மைதானத்தில், இந்தியாவிற்கும் ஜிம்பாப்வே அணிக்கும் இடையில் டி20 கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. சமீபத்திய தோல்விகளின் காரணமாக இந்த தொடர் மீது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டாவிட்டாலும், சர்வதேச அளவில் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷியின், ஒரு அதிரடியான ஆட்டத்திற்கான சர்வதேச அளவில் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களும் கூட அவரது ஆட்டத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் களமிறங்கிய வைபவின் அறிமுகம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இந்திய அணி நிர்வாகம் வைபவிற்கு போதிய வாய்ப்பு கொடுக்காமல் , பெஞ்சில் அமர வைத்து விட்டனர்.
இந்நிலையில் , நேற்று ஊடகத்திற்கு பதில் அளித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி " கடந்த 4 மாதங்களில் எனக்கு நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. இது கிரிக்கெட்டின் ஒரு பகுதி தான், இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடைபெறும். ஆனால், நான் எனது செயல்முறையை தொடர்ந்து பின்பற்றுவேன். இந்திய அணிக்காக 100% பங்களிப்பை எப்போதும் கொடுக்க வேண்டும் என்பதில் நான் முழு கவனம் செலுத்துகிறேன்.
எனக்கு தேவையான பயிற்சிகள், வழிகாட்டுதல்கள், எனக்கு வேண்டியவை அனைத்தையும் பயிற்சியாளர்கள் செய்து கொடுக்கிறார்கள். கேட்ட அனைத்தும் எனக்கு கிடைக்கிறது. அதனால், நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். எனது முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் செய்து வருகின்றனர்.
நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் இதே மைதானத்தில், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை வென்றோம். தற்போது அதே மைதானத்தில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வந்தது, எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அதை நான் மிகவும் ரசித்து வருகிறேன்," என்றார்.
மேலும் பேசிய வைபவ் "அந்த உலகக் கோப்பை போட்டி நடைபெற்ற போது மைதானத்தின் சூழ்நிலையை தான் சரியாக புரிந்து கொண்டதாகவும், அதே அனுபவம் தற்போது மீண்டும் தனக்கு கைகொடுக்கும்" என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்த அனுபவத்தைக் கொண்டு அப்போது கற்றுக் கொண்ட விஷயங்களை இந்த தொடரிலும் நான் பயன்படுத்த முயற்சி செய்வேன். இதுவரை செய்த பயிற்சியின் மீது நம்பிக்கை கொண்டு இயல்பாக விளையாட வேண்டும். அணிக்கு என்னால் முடிந்த அளவு பங்களிப்பை கொடுப்பதே என் நோக்கம் , என்று வைபவ் சூர்யவன்ஷி கூறியுள்ளார்.
முன்னதாக வைபவ் சூர்யவன்ஷி பற்றி ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா கூறுகையில் "வைபவ் மிகவும் அற்புதமான திறமை கொண்ட கிரிக்கெட் வீரர். 15 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிற ஒரு சிறுவனை, இரண்டு மூன்று போட்டிகளை வைத்து எடை போடுவது சரியல்ல. அவரை ஒழுங்காக வழி நடத்தி கவனமாக வளர்த்தெடுத்தால், இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக அவர் இருப்பார் என்று நான் நம்புகிறேன்," என்று பாராட்டியுள்ளார்.