சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க செய்தியாளர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். புகைப்படம் எடுக்க பல பிரபலங்கள் விரும்பினாலும், சில பிரபலங்கள் செய்தியாளர்களுடன் வாக்குவாதம் செய்த சம்பவங்களும் நடந்த வண்ணம் தான் உள்ளன.
இதனால் அவர்களின் பிரைவசி கெடும் என்பதை பலர் உணருவதில்லை. இதனால் பொது வெளியில் பல பிரபலங்கள் பல சங்கடங்களை அனுபவிக்கின்றனர். மேலும் சிலர் தங்களது குழந்தைளை புகைப்படமோ, வீடியோவோ எடுக்க அனுமதிப்பதில்லை. இந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது குழந்தைகள் பற்றி விஷயங்கள் வெளிவர விரும்புவதில்லை.
விராட் கோலி தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்கக் கூடாது என மெல்போர்ன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி, தனது தனிப்பட்ட வாழ்க்கையை தனது கேரியரில் வரும் ஸ்பாட் லைட்டிலிருந்து விலக்கி வைத்துக் கொள்ள விரும்புகிறார். அவரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் ஊடகங்கள் புகைப்படம் எடுப்பதை அவர் விருப்பவில்லை.
விராட் கோலி தனது குடும்பத்தினருடன் மெல்போர்ன் வந்தடைந்த போது அங்கு நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலியா செய்தியாளர்கள், விராட் கோலி குடும்பத்தினரை வீடியோ எடுக்க முற்பட்டனர். அப்போது இதை பார்த்து கடுப்பான விராட் கோலி, என்னுடைய அனுமதி இன்றி என்னுடைய குடும்பத்தினரை புகைப்படம், வீடியோ எடுக்காதீர்கள். எங்களுக்கு கொஞ்சம் பிரைவசி தேவை என்று விராட் கோலி கோபமாக கூறினார்.
இதனை அடுத்து அங்கு இருந்த பெண் செய்தியாளர் ஒருவரிடம் விராட் கோலி கோபமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விமான நிலைய செய்தியாளர் கூறியதாவது "காத்திருந்த கேமராக்களைப் பார்த்ததும், ஊடகங்கள் தனது குழந்தைகளுடன் சேர்த்து தன்னை படம்பிடிப்பதாக நினைத்தபோது விராட் கோலி கொஞ்சம் கோபமடைந்தார்."
"எனது குழந்தைகளுடன் எனக்கு கொஞ்சம் தனியுரிமை தேவை, என்னிடம் கேட்காமல் நீங்கள் படம் எடுக்க முடியாது" என்று விராட் கோலி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
கோலியிடம் உங்கள் குடும்பத்தை படம் எடுக்கவில்லை என்று செய்தியாளர் மற்றும் கேமராமேன் நடந்ததை தெளிவுபடுத்தியவுடன் நிதானமடைந்து கேமராமேனுடன் கைகுலுக்கிய பின்னர் விமானநிலையத்தை விட்டு விராட் கோலி வெளியேறினார்.
அப்போது ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் விமான நிலையத்தில் ஏற்பட்ட அசெளகரியத்துக்கு மன்னிப்பு கேட்டார்கள். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு டெஸ்ட் போட்டி ஒன்றில் விராட் கோலியின் மகள் வீடியோ ஒன்று வைரலானது. அப்போது விராட் கோலி இந்த வீடியோவை உடனே நீக்கி விடுங்கள் என ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து அது சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இந்த நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தற்போது மெல்போர்ன் வந்தடைந்தனர்.