
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. இவர் இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணிக்காக 82 சதங்களை அடித்து அசத்தி உள்ளார். சீனியர் வீரரான விராட் கடந்த டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
நட்சத்திர வீரரான விராட் கோலி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 18 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் இதுவரை 262 போட்டிகளில் 8447 ரன்களை குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 505 ரன்கள் விளாசி, அதிக ரன்களை அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சில ஆண்டுக்கு முன்பு விலகி விட்டார்.
பெங்களூரு அணியின் கேப்டன்ஷிப்பை உதறியது குறித்து 36 வயதான விராட்கோலி தற்போது அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், ‘ஒரு கட்டத்தில் எனது வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்ததால் கேப்டன் பொறுப்பு மிகவும் கடினமாகி விட்டது. இந்திய அணிக்காக 7-8 ஆண்டுகள் கேப்டனாக பணியாற்றினேன். பெங்களூரு அணியை 9 ஆண்டுகள் வழிநடத்தினேன். இந்தியாவுக்காக எனது கேரியரில் நிறைய வென்றுள்ள நான் ஏராளமான பாராட்டுகளையும் பெற்றுள்ளேன்.
நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது. அனைவரது கவனமும் என் மீது தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருந்தது. ஒரு தருணத்தில் அது ரொம்ப மிகையானதால், எனக்குள் சுமையாக உணர்ந்தேன். அதனால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தேன். கேப்டன் பதவி இல்லையென்றால், பேட்டிங்கில் கவனம் இருக்கும். ஏனெனில் நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒவ்வொரு முறையும் மதிப்பிடப்படாமல் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். நெருக்கடியின்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்க்கையில் போதுமான இடைவெளி அவசியம்’ என்றார்.
தனது ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்த கோலி, 3வது இடத்தில் பேட்டிங் செய்ய உறுதுணையாக இருந்ததற்காக எம்.எஸ். தோனி மற்றும் கேரி கிர்ஸ்டனை பாராட்டினார். "எனது விளையாட்டைப் பற்றி நான் மிகவும் யதார்த்தமாக இருந்தேன். திறமையின் அடிப்படையில் நான் மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக நான் உணரவில்லை. எனக்கு இருந்த ஒரே விஷயம் உறுதிப்பாடுதான்," என்று அவர் கூறினார்.
2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கோலி தலைமைப் பதவிகளில் இருந்து விலகத் தொடங்கினார், இந்தியாவின் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார், பின்னர் ஆர்சிபியின் கேப்டன் பதவியை கைவிட்டார். 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில், தென்னாப்பிரிக்காவிடம் தொடர் தோல்விக்குப் பிறகு, அவர் இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார்.