
இந்திய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில வீரர்கள் ரன் குவிப்பதிலும், சாதனைகள் படைப்பதிலும் வல்லவர்களாக இருந்துள்ளனர். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் இதுவரை ஏகப்பட்ட சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சதத்திற்கு சதம் கண்ட சச்சினின் சாதனை முதல் பௌலிங்கில் கலக்கும் பும்ரா வரை பல்வேறு சாதனைகளால், இந்திய கிரிக்கெட் வரலாறு மேம்பட்டுள்ளது. இதில் வெள்ளை நிறப் பந்துகள் பயன்படுத்தப்படும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகச் சிறந்த வீரர் யார் எனக் கேட்டால், நாம் பல வீரர்களின் பெயரைச் சொல்வோம். ஆனால் கங்குலி புகழ்வது ஒரே ஒரு வீரரை மட்டும் தான். யார் அந்த நட்சத்திர வீரர்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
தனிப்பட்ட வீரர்களின் சொந்த சாதனைகளை விடவும், அணியின் வெற்றி தான் அனைத்தையும் விட முக்கியம். அணியின் நலனைக் கருத்தில் கொண்டு விளையாடும் சில வீரர்களில் முக்கியமானவர் சௌரவ் கங்குலி. இவரது சமகால வீரர்களான வீரேந்திர ஷேவாக், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் போன்ற வீரர்கள் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்கள். இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த வீரர் என தனது சமகால வீரர்களில் எவரையும் கங்குலி குறிப்பிடவில்லை என்பது ஆச்சரியம் தான்.
சில ஆண்டுகள் கேப்டனாக வழிநடத்திய கங்குலி, கடந்த 2003 ஆம் ஆண்டு உலக்கோப்பையில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரராக விளங்கிய கங்குலி, தனக்குப் பிடித்தமான வீரர் விராட் கோலி தான் என்பதை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கங்குலி மேலும் கூறுகையில், “ஆடவர் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி போன்ற வீரர்கள் ஒருமுறை மட்டுமே தடம் பதிப்பார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்கள் என்பது நம்ப முடியாத சாதனையாகும். இதில் இவரது பல சதங்கள், இந்திய அணி இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடிக்க உதவியவை என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில், உலகம் கண்ட மகத்தான வீரர் கோலி என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டில் விராட் கோலி சதமடித்தும், அடுத்தடுத்தப் போட்டிகளில் ரன் குவிக்காமல் போனது துரதிருஷ்டவசமானது. இருப்பினும் இது சகஜமான ஒன்று தான். ஒவ்வொரு வீரருக்கும் பலம் மற்றும் பலவீனம் ஆகிய இரண்டும் இருப்பது இயல்பு தான். இன்னும் கோலியிடம் நிறைய கிரிக்கெட் மீதமிருக்கிறது. மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்புவார் என நான் நம்புகிறேன். சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கோலியின் அபாரமான ஆட்டம் நிச்சயமாக வெளிவரும்” என அவர் கூறினார்.
இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பெற்ற சரித்திர வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் விராட் கோலி. பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான கோலிக்கு, பிசிசிஐ தொடர் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக ரன் குவிக்கத் தடுமாறும் விராட் கோலி, மீண்டு வருவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.