டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கிங் கோலி!

Virat Kohli
Virat Kohli
Published on

ஐபிஎல் சீசன் தொடங்கினால், அது முடியும் வரையில் கிரிக்கெட் உலகில் அதிகம் பேசப்படும் ஒரு தலைப்பாக ஐபிஎல் தான் இருக்கும். ஆனால் ஐபிஎல் தொடர் இன்னும் முடிவடையாத நிலையில், கிரிக்கெட் உலகில் மிகவும் டிரெண்டிங் ஆகியிருப்பது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் பெயர்கள் தான். எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் மற்றும் கோலி விளையாட ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் திடீரென ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும், விராட் கோலி ஓய்வு பெற விருப்பம் தெரிவித்ததும் கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

ரோஹித் மற்றும் கோலி என இரண்டு ஜாம்பவான்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற்றிருப்பது பிசிசிஐ-க்கு தலைவலியாக மாறியுள்ளது. டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விட்டதால், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்டார் கோலி. ஆனால் அடுத்த 5 நாட்களிலேயே கோலி ஓய்வு பெற்றிருப்பது, இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.

அனுபவ வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வெல்வது கடினம். ரோஹித்தும் இல்லை, கோலியும் இல்லையென்றால் நிச்சயமாக அது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகவே அமையும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரே கேப்டன் விராட் கோலி தான். அவர் இல்லாமல் இந்திய அணியால், இங்கிலாந்தில் தாக்குப் பிடிப்பது கடினம்.

இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், அனுபவமும் இந்திய அணிக்குத் தேவைப்படுகிறது. இந்திய அணியில் மிகவும் ஃபிட்டான வீரர் என்றால் உடனே பலரும் கை காட்டுவது விராட் கோலியைத் தான். அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடலாம். அதற்கான திறன் கோலியிடம் இருக்கிறது. இருப்பினும் கோலியின் இந்த திடீர் ஓய்வு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ரோஹித் ஓய்வு பெற்றதும் கேப்டன்சியை கேட்டதாகவும், அதற்கு பிசிசிஐ மறுத்தாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் கோலி ஓய்வு பெற விரும்பினார் என்று தெரிகிறது. இந்நிலையில், கோலியின் ஓய்வு முடிவு உண்மையாக இருக்காது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
விராட் கோலி - இளம் வீரராக களத்தில் நுழைந்து, இன்று அனுபவ வீரராக ஜொலிக்கிறார்!
Virat Kohli

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தை சமாளிக்க கோலி தான் இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்தார். கோலி டெஸ்ட் போட்டிகளில் சமீபத்தில் ரன் குவிக்கத் தடுமாறினாலும், அவர் இந்திய அணிக்குத் தேவை என அம்பத்தி ராயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் வீரர்கள் பலரும் கோலி ஓய்வு பெறக் கூடாது என்றே விரும்பினர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் விராட் கோலி இன்று தனது ஓய்வை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து விட்டார். ஒரு கேப்டனாக கோலியின் செயல்பாடு டெஸ்ட் போட்டிகளில் அபரிமிதமாகவே இருந்துள்ளது.

ஓய்வு குறித்து அவர் கூறுகையில், “14 ஆண்டுகளாக இந்தியாவின் வெள்ளை நிற ஜெர்சியை அணிந்து விளையாடியதில் பெருமை கொள்கிறேன். எனது அனைத்து திறன்களையும் சோதித்தது டெஸ்ட் கிரிக்கெட் தான். நான் என்னால் முடிந்ததை கிரிக்கெட்டிற்கு செய்து விட்டேன். அதேபோல் கிரிக்கெட்டும் அதற்கு பலமடங்கு பலனை எனக்கு அளித்து விட்டது. என்னை வழிநடத்தியவர்கள் மற்றும் கடினமான நேரத்தில் துணை நின்ற ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” என கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களுடன் 9,230 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்: நட்பு தான் பெருசு - விராட் கோலி!
Virat Kohli

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com