ஒருநாள் உலகக் கோப்பையில் நானும் கே.எல்.ராகுலும் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால், முடிவு மட்டும் நாங்கள் நினைத்தப்படி வரவில்லை என்றும் சாம்பியன்ஸ் ட்ராபியில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றும் பேசியிருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது. பாகிஸ்தானில் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது தொடர் மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும். இந்த ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் பிப்ரவரி 19ம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று நடைபெறும்.
8 அணிகள் போட்டியிடும் இந்த தொடரில் 15 போட்டிகள் நடைபெறும். அதன்படி குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கிறது.
இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடத்தப்படும்.
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடப் போகும் இந்திய அணி வீரர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ ஐசிசியிடம் கொஞ்சம் அவகாசம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அணி தேர்வில் நிறைய குழப்பங்கள் உள்ளன. ரிஷப் பண்டிற்குப் பதிலாக சஞ்சு சாம்சனையும் ஜடேஜாவிற்கு பதிலாக அக்சர் பட்டேலையும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக விவாதங்கள் ஏற்படும் நிலையில் 8 ஆண்டுகள் கழித்து நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
அந்தவகையில் ஸ்ரேயாஸ் ஐயர் இதுகுறித்து பேசியிருக்கிறார்.
"எந்த இடத்திலும் பேட்டிங் செய்யத் தயாராக இருக்கிறேன். நானும் கே.எல் ராகுலும் ஒருநாள் உலக கோப்பையில் முக்கியமான பங்களிப்பை அளித்தோம். அந்த சீசன் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. இருப்பினும் இறுதி போட்டியில் நாங்கள் நினைத்ததைச் செய்யமுடியாமல் போனது. எனவே சாம்பியன்ஸ் டிராபில் தேர்வானால் அதனைப் பெருமையாக கருதுகிறேன்.” என்று பேசியிருக்கிறார்.