2024-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சாதித்தது என்ன என்பது பற்றியும், போட்டியில் விளையாடியது, அதிகபட்ச ரன், விக்கெட், வெற்றி, தோல்வி குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
2024-ம் ஆண்டில் 53 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இந்திய அணி 15 டெஸ்டுகளில் ஆடி 8-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது.
மெகா ஸ்கோராக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 823 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. பாகிஸ்தான் மண்ணில் 800 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது.
இலங்கை 42 ரன்னிலும் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), இந்தியா 46 ரன்னிலும் (நியூசிலாந்துக்கு எதிராக) முடங்கியது குறைந்தபட்சமாகும்.
மொத்தம் 85 சதங்களும், 224 அரைசதங்களும் பதிவாகின. 651 சிக்சரும், 5,467 பவுண்டரிகளும் நொறுக்கப்பட்டன. 247 டக்-அவுட்டுகளும் நிகழ்ந்துள்ளன.
அதிகபட்சமாக இந்திய தரப்பில் 14 சதங்களும் அடிக்கப்பட்டன. இந்த ஆண்டில் அதிக சிக்சர் அடித்த அணியாக இந்தியா (142 சிக்சர்) விளங்குகிறது. தனிநபரில் ஜெய்ஸ்வால் (36 சிக்சர்) சிக்சர் மன்னனாக வலம் வருகிறார்.
அதிக ரன் குவிப்பில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட் முதலிடம் பிடித்தார். அவர் 17 டெஸ்டில் ஆடி 6 சதம் உள்பட 1,556 ரன்கள் எடுத்துள்ளார். 2-வது இடத்தை இந்தியாவின் ஜெய்ஸ்வால் பெற்றார். அவர் 15 டெஸ்டில் ஆடி 3 சதம், 9 அரைசதம் உள்பட 1,478 ரன்கள் சேர்த்துள்ளார்.
இதே போல் மொத்தம் நடந்த 53 டெஸ்டில் 1,785 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. விக்கெட் வேட்டையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 71 விக்கெட்டுகளுடன் (13 டெஸ்ட்) முதலிடம் பிடித்தார். இதில் இன்னிங்சில் 5 முறை 5 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும்.
இந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு அணிகள் முக்கியத்துவம் அளிக்காததால் மொத்தம் 104 ஆட்டங்கள் நடந்தன. 41 சதங்களும், 220 அரைசதங்களும் அடிக்கப்பட்டன. இந்திய அணி ஒரே ஒரு தொடராக இலங்கைக்கு எதிராக விளையாடி 1-2 என்ற கணக்கில் தோற்றது.
2024-ம் ஆண்டில் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்று மகுடம் சூடிய இந்தியா 26 ஆட்டங்களில் 24-ல் வெற்றி கண்டு அதிக வெற்றிகளை குவித்த அணியாக திகழ்கிறது. அத்துடன் இந்தியா 7 சதங்கள் அடித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
ரன் குவிப்பில் சாதனைகளுக்கு பஞ்சமில்லை. காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே 4 விக்கெட்டுக்கு 344 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. இந்திய அணி, வங்காளதேசத்துக்கு எதிராக 297 ரன்கள் எடுத்து தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.
சிக்சர் மழை பொழிந்த அணி வெஸ்ட் இண்டீஸ். 243 சிக்சருடன் முதலிடத்தை பிடித்தது. இந்தியா 236 சிக்சருடன் அடுத்த இடத்தில் இருக்கிறது.
பெண்கள் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா ரன்குவிப்பில் முதலிடத்தில் (13 ஆட்டத்தில் 4 சதம் உள்பட 747) உள்ளார். விக்கெட் சாதனையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா (24 விக்கெட்) நம்பர் ஒன் ஆக உள்ளார்.