இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக சுப்பன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்து வரும் இங்கிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியை வழிநடத்தப் போகிறார் இந்த இளம் கேப்டன். ஜஸ்பிரீத் பும்ராவிற்கு கேப்டன் பதவி கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மீண்டும் ஒரு பேட்ஸ்மேனுக்கே வாய்ப்பை வழங்கி விட்டது பிசிசிஐ. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இன்னும் வேடிக்கையானது. பும்ராவால் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாது என்பது தான் அந்த காரணம்.
கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா இரண்டு போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார். கேப்டனாகவும், பந்து வீச்சாளராகவும் அவரது செயல்பாடு பாராட்டத்தக்க வகையில் இருந்தது. அந்தத் தொடரில் 9 இன்னிங்ஸில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய பேட்டர்களை நடுங்க வைத்தார் பும்ரா. இருப்பினும் கடைசி டெஸ்டில் முதுகுப்பகுதியில் அவருக்கு ஏற்பட்ட காயம் தான் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.
பும்ராவின் காயத்தைக் கருத்தில் கொண்டு தான் அவருக்கு கேப்டன் பதவியைக் கொடுக்க பிசிசிஐ முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு மீண்டும் பும்ராவிற்கு காயம் ஏற்படாமல் இருக்க அவ்வப்போது ஓய்வளிக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன்படி வருகின்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
அடுத்த ஆண்டு வரவிருக்கும் டி20 உலகககோப்பை மற்றும் 2027 ஒருநாள் உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு, பும்ராவிற்கு ஓய்வளிக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். இதன்படி பும்ரா இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும், அந்த 3 போட்டிகள் எவை என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் நிச்சயமாக இங்கிலாந்து அணிக்கு சாதகமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கெண்டு விளையாடிய போது, 5 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரை கைப்பற்ற உதவினார் பும்ரா.
பும்ராவின் வேகத்தை சமாளிக்க இங்கிலாந்து பேட்டர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், 3 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாட இருப்பது இங்கிலாந்துக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது. ஒருவேளை ஜஸ்பிரீத் பும்ரா 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டுமென்றால், அதற்கு மற்ற பௌலர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினால், பும்ராவிற்கான பணிச்சுமை வெகுவாக குறையும்.
உலகின் நம்பர் ஒன் பௌலராக இருக்கும் பும்ராவின் வேகத்தில், சீறிப்பாயும் பந்துகளை இங்கிலாந்து பேட்டர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி வருகின்ற ஜூன் 20 இல் லீட்ஸில் நடைபெறவுள்ளது.