

கிரிக்கெட் விளையாட்டுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஒரு பெரிய வீரர் களத்திற்குள் வரும் போது ரசிகர்களின் ஆரவாரம் மற்ற வீரர்களுக்கு பொறாமை ஏற்படுத்தும் வகையில் அமையும். குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டன் தோனி களமிறிங்கும் போது அவருக்கு கிடைக்கும் வரவேற்பு, அபரிமிதமாக இருக்கும்.
மற்ற நாட்டு வீரர்கள் கூட தோனிக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து ஆச்சரியம் அடைகின்றனர். அவ்வகையில் தற்போது தோனியை அடுத்து விராட் கோலி மைதானத்தில் நுழையும் போது, ஆரவாரத்துடன் ஒலியெழுப்பி ரசிகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். தற்போதைய இந்திய அணியில் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தான் மூத்த வீரர்களாக உள்ளனர்.
இவர்கள் இருவரும் வருகின்ற 2027 உலகக் கோப்பை வரை விளையாட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டு இந்தியா வெறும் 18 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. ஆகையால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ரசிகர்கள் அதிகளவில் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஒரு பெரிய வீரர் களத்தில் நுழையும் போது கிடைக்கும் வரவேற்பானது, அவுட் ஆகி வெளியில் செல்லும் வீரருக்கு சற்று மன உளைச்சலை ஏற்படுத்த அதிக வாய்ப்புண்டு. கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சென்னை அணியில் இந்த நிகழ்வை பார்க்க முடிந்தது. அதாவது தோனி களமிறங்குவதற்கு முன்பாகவே ரவீந்திர ஜடேஜா களமிறங்கியதால், அடுத்த விக்கெட் எப்போது விழும், தோனி எப்போது களத்துக்கு வருவார் என்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருந்தனர்.
அப்படி பல நேரங்களில் ரவீந்திர ஜடேஜா அவுட் ஆகி வெளியே செல்லும் போதெல்லாம், தோனி மைதானத்திற்குள் நுழையும் போது ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைத் தொடும் அளவிற்கு இருந்தது. தற்போது சர்வதேச போட்டிகளிலும் இந்த ஆரவாரத்தை ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.
குறிப்பாக விராட் கோலி களத்திற்கு நுழையும்போது ரசிகர்களின் ஆரவாரம் எதிர்பாராத அளவில் இருக்கிறது. ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு களமிறங்கும் வீரருக்கு புத்துணர்ச்சியை அளித்தாலும், அவுட் ஆகி வெளியே செல்லும் வீரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். ரசிகர்களின் மகிழ்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் இந்த செயல் சரியானது அல்ல என விராட் கோலியும் தெரிவித்திருந்தார். சக அணி வீரர் அவுட்டாகி வரும்போது, மற்றொரு வீரருக்கு உற்சாக வரவேற்பு கிடைப்பது மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி ஆற்றிய பங்கு ஏராளம். உலகக்கோப்பையுடன் கோலி விடைபெற இருப்பதால், இன்னும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகிறார். ஆகையால் தான் ரசிகர்கள் விராட் கோலிக்கு அதிக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அதே போல் தான் தோனி எப்போது வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விடுவார் என்ற எண்ணத்தில், அவர் களமிறங்கும் போதெல்லாம் ஆரவாரத்துடன் மகிழ்கின்றனர் ரசிகர்கள். இருப்பினும் தனிப்பட்ட வீரர்களுக்கு, ரசிகர்கள் கொடுக்கும் இந்த வரவேற்பு ஏற்புடையது அல்ல என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதினாலும், இதனைக் கண்டு வியந்து பாராட்டவும் செய்கிறார்கள்.