இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் சிவம் துபே பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அது ஏன் என்று பார்ப்போம்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையே 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியில் விளையாடிய சிவம் துபே, அரை சதம் அடித்தார். இவர் பேட்டிங் செய்த போது சிவம் துபேவின் ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. சரியாக 20வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை சந்தித்தார் சிவம் துபே.
அப்போது இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேமி ஓவர்டன் பவுன்சர் ஒன்றை வீசினார். அதை புல் ஷாட்டாக (Pull shot) அடிக்க முயற்சி செய்தார் சிவம் துபே. ஆனால், பந்து அவரது ஹெல்மெட்டில் தாக்கியது.
இதனால் அவருக்கு ஏதும் மூளை அழற்சி ஏற்பட்டதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர் என்னால் விளையாட முடியும் என்று கூறி விளையாடினார். இதை அடுத்து அந்த இன்னிங்ஸின் கடைசி பந்தை அவர் சந்தித்தார். அதில் அவர் ரன் அவுட்டும் ஆனார். சிவம் துபே 34 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து இருந்தார். ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து இருந்தார்.
இதனால் இங்கிலாந்து அணிக்கு 182 என்ற இலக்கு அமைந்தது. பந்துவீச வந்த இந்திய அணியுடன் சிவம் துபே களத்திற்கு வரவில்லை. முதலில் ரமன்தீப் சிங் அவருக்கு பதிலாக ஃபீல்டிங் செய்தார். சரியாக ஆறாவது ஓவரின் முடிவில் ஹர்ஷித் ரானா களத்துக்கு வந்தார்.
இதனால் சிவம் துபேவுக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து அவர் அணியிலிருந்து பாதியில் நீக்கப்பட்டதன் காரணம் வெளியானது. அதாவது அவருக்கு மூளை அழற்சி ஏற்பட்டது உறுதியானது. இது போன்ற மூளை அழற்சி ஒரு வீரருக்கு ஏற்பட்டால் அவர் பாதி போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு இணையான ஒரு வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது.
ஆனால் ஒரு பேட்டருக்கு பதிலாக ஒரு பவுலரை களமிறக்கியது சரியா என்ற கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.