ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இல்லையென்றால் என்ன? இந்திய அணிக்கு ஆள் இல்லையா? என்பதுபோல் பேசியிருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு தூண்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருவரும் இந்திய அணியின் வெற்றிக்கு பல ஆண்டுகளாக முக்கிய பங்காற்றியுள்ளனர்.
ரோஹித் ஷர்மா, தனது அதிரடியான பேட்டிங்கிற்காகவும், கேப்டன்ஷிப் திறனுக்காகவும் அறியப்படுகிறார். அவர் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவானாக திகழ்ந்தார். அவர் 123 டெஸ்ட் போட்டிகளில் 9230 ரன்களை எடுத்துள்ளார். இவர்களின் ஓய்வு இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
இருப்பினும், இவர்கள் இருவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம்.
ரோஹித் மற்றும் விராட் இல்லாமல் இந்திய டெஸ்ட் அணி எப்படி செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த இரண்டு ஜாம்பவான்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவது சவாலான காரியமாக இருந்தாலும், இந்திய கிரிக்கெட் புதிய உயரங்களை எட்டும் என்று நம்புவோம்.
அந்தவகையில் இவர்களின் ஓய்வு குறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் பேசியிருக்கிறார், “இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன் மற்றும் சவுரவ் கங்குலி ஆகிய நான்கு சிறந்த வீரர்களும் ஒரே நேரத்தில் விலகியபோது ஒரு பயம் ஏற்பட்டது. ஆனாலும், இந்திய அணி உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்து வந்தது.
ஆகவே இதை நான் நம்புகிறேன். இந்தியாவுக்காக விளையாட போதுமான இளம் வீரர்கள், இளைஞர்கள் இருக்கும் வரை, இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இருக்கும் வரை, (அதாவது அந்த வகையான கடினமான சூழ்நிலையை கடந்து வருபவர்கள் தரமான திறமைசாலிகளாக இருக்க வேண்டும்) கவலை இல்லை. ஆகையால் அவர்கள் இருவரின் ஓய்வு குறித்து பீதியடைய வேண்டாம்." என்று பேசியுள்ளார்.