இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கட் அணி , அங்கு 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாடி வருகிறது. ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி , இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. இதன் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட டி 20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற அளவில் முன்னிலைப் பெற்றுள்ளது.
ஜூலை1, நேற்று இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில், இரண்டாவது டி 20 போட்டி தொடங்கியது. மீண்டும் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இம்முறையும் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஓய்வில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரித்கவுர் நேற்று போட்டிக்கு திரும்பினார். இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரராக ஸ்மிருதி மந்தானாவும், ஷபாலி வர்மாவும் களமிறங்கினர். இந்த போட்டி ஸ்மிருதி விளையாடும் 150 வது டி20 போட்டியாகும்.
இந்த போட்டியில் இந்திய அணியை கட்டுப்படுத்தும் முயற்சியில் இங்கிலாந்து தீவிரமாக இருந்தது. 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 31 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததிருந்தது. ஸ்மிருதி 13 ரன்களிலும் ஷபாலி 3 ரன்களிலும் ஆட்டமிழந்திருந்தனர். பின்னர் வந்த ஜெமிமாவும் அமன்ஜோத் கவுரும் இந்திய அணியை தூக்கிப் பிடித்தனர். இருவரும் தலா 63 ரன்கள் குவித்தனர். இருவரும் தலா 9 பவுண்டரிகளை விளாசி இருந்தனர். கேப்டன் ஹர்மன் பிரித்கவுர் வந்த வேகத்திலேயே வெளியேறினார்.
அமன்ஜோத் கவுரும் ரிச்சா கோஷும்(32) இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். ஜெமிமா மற்றும் அமன் ஜோத்தின் அடித்தளத்தில் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கட்டை இழந்து 181 ரன்களை குவித்து இருந்தது.
துரத்தலை தொடங்கிய இங்கிலாந்து சார்பில் டேனி வயட் ஹாட்ஜ் மற்றும் சோபியா டன்க்லி ஆகியோர் களமிறங்கினர். இம்முறை டேனி வயட் 1 ரன் அடித்து, 4 முறை டக் அவுட் ஆகும் வாய்ப்பிலிருந்து தப்பித்து கொண்டார். ஆயினும் அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை . அடுத்தடுத்த பந்தில் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தலா 1 ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணியின் அஸ்திவாரம் இடிந்து விழுந்தது. ஆனாலும் இருவருமே டக் அவுட் ஆவதிலிருந்து தப்பித்து இருந்தனர்.
4 வது ஓவரில் அமன்ஜோத் பந்தில் இங்கிலாந்து கேப்டன் ஸ்கைவர் பிரண்டின் அவுட்டாகி வெளியேற இங்கிலாந்து அணி தத்தளிக்க ஆரம்பித்தது. 4 வது விக்கட்டிற்கு ஜோடி சேர்ந்த பியுமண்ட் மற்றும் ஜோன்ஸ் அணியை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற போராடினர். 54 ரன்களில் பியுமண்ட் ரன் அவுட் ஆகி வெளியேற இங்கிலாந்து அணியின் கனவும் கலைய தொடங்கியது.
இறுதி வரை இங்கிலாந்து வெற்றிக்கு போராடியது , ஆயினும் இந்திய அணியின் பந்து வீச்சில் அதிக ரன்களை அவர்களால் குவிக்க முடியவில்லை. இறுதியில் அவர்களால் 157/7 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இங்கிலாந்து அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.