
கூகுள் வலைத்தளத்தின் முதன்மைப் பக்கத்தில் ஒவ்வொரு நாளுக்குமான சிறப்புகளை, பன்னாட்டு அளவில், நாடுகள் அளவில் வெளிப்படுத்தும் விதமாக, கேலிப்படங்கள் (Doodles) உருவாக்கப்பட்டு நாள்தோறும் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. கூகுள் வலைத்தளத்தில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமான இலச்சினைக் கேலிப்படங்கள் (Doodles) காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
1998 ஆம் ஆண்டில் கூகுளின் முதல் கேலிப்படம் வெளியிடப்பட்டது. இது கூகுள் நிறுவனர்களான லாறி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் பர்னிங் மேன் அலுவலகத்திற்கு வெளியே வருவார்கள் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் விரைவு வழியாகக் கொண்டு, கூகுள் இலச்சினையில் உருவாக்கிப் பயன்படுத்தப்பட்டது.
அதன் பிறகு, 2000 ஆம் ஆண்டு மே 1 முதல் கூகுள் இலச்சினையின் வழியாக, பல்வேறு நிகழ்வுகள், பண்பாடுகள், இடங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வழியில் இன்றைய நாளில், மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை அடிப்படையாகக் கொண்ட கூகுளின் இலச்சினைக் கேலிப்படமாக (Doodle) இடம் பெற்றிருக்கிறது. இந்த டூடுளில் கிரிக்கெட் மட்டை, கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் ஸ்டம்ப் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியானது, 1973 ஆம் ஆண்டு அறிமுகமாகி 4 ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடத்தப்படுகிறது. தற்போது 13 ஆவது மகளிர் உலகக் கோப்பைப் போட்டியை ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை என்று இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இப்போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது. இந்தக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி நவம்பர் 2 ஆம் நாள் வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் நடத்தப்படும் வகையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டும் நிலையில் இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லையெனில், நவிமும்பையில் நடைபெறவிருக்கிறது. 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி திரும்பியிருக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இந்திய அணி உலகக் கோப்பையை ஒரு போதும் வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இறுதி ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இந்திய கேப்டன் 36 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 5 ஆவது உலகக் கோப்பைப் போட்டியாகும். சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் அரையிறுதியைக் கூட நெருங்கியதில்லை.
இவ்விரு அணிகள் இதுவரை 35 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும், 3-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.