"கொச்சியில் நடந்த WPL ஏலம்!" – ரூ.1.10 கோடிக்கு ஏலம் போன ஆஸ்திரேலிய புயல் சோஃபி மோலின்யூ!

WPL 2027 ஏலம்: ரூ.1.10 கோடிக்கு விற்ற ஆஸி. ஆல்ரவுண்டர்! கொச்சியில் மாஸ் சம்பவம்!
sophie molineux
sophie molineuxSource:cric info
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

மகளிர் கிரிக்கெட்டில் திறமையான வீராங்கனைகளுக்கு உலகளவில் கிடைக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு சான்றாக, 2027ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் (WPL) ஏலத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை சோஃபி மோலின்யூ ரூ.1.10 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொச்சியில் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற இந்த ஏலத்தில் பல வீராங்கனைகள் புதிய அணிகளில் இடம்பிடித்தனர். இந்த ஏலத்தின் முக்கிய அம்சங்களையும், சோஃபியின் தேர்வு ஏன் கவனம் பெற்றது என்பதையும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக், சர்வதேச வீராங்கனைகளுக்கும் வளர்ந்து வரும் இந்திய வீராங்கனைகளுக்கும் சிறந்த வாய்ப்புகளை வழங்கி வருகிறது. 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாவது தொடருக்கான அணிகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐந்து அணிகளும் ஏலத்தில் பங்கேற்றன.

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரான சோஃபி மோலின்யூ, உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணியால் ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு தேர்வான வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவரது அடிப்படை விலை ரூ.50 லட்சமாக இருந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அவரை வாங்க ஆர்வம் காட்டியது. இரு அணிகளுக்கும் இடையே போட்டி நிலவியதால் ஏலத்தொகை உயர்ந்தது. இறுதியில் உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு அவரைத் தன்வசப்படுத்தியது.

சோஃபி ஏற்கெனவே 2024ஆம் ஆண்டு WPL தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பட்டம் வென்ற பயணத்தில் முக்கியப் பங்காற்றியவர். இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 2026ஆம் ஆண்டு தொடரில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது மீண்டும் WPL தொடரில் களமிறங்கவிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

இந்த ஏலத்தில் இந்திய வீராங்கனை கிரண் நாக்விரேவும் கவனம் ஈர்த்தார். அவரை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.75 லட்சத்துக்கு வாங்கியது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணி இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரான ஜி. கமலினியை ரூ.40 லட்சத்துக்கு தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனாசனும் ரூ.40 லட்சத்துக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்தார்.

இளம் வீராங்கனைகளுக்கும் இந்த ஏலம் வாய்ப்பளித்தது. வெறும் 15 வயதுடைய உமா காஷ்வியை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.10 லட்சத்துக்கு வாங்கியது. அனுபவம் வாய்ந்த சர்வதேச வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு, இளம் வீராங்கனைகளின் திறனை மேம்படுத்த உதவும்.

மொத்தம் 150 வீராங்கனைகள் ஏலத்திற்குப் பரிசீலிக்கப்பட்ட நிலையில், 25 பேர் அணிகளால் வாங்கப்பட்டனர். ஐந்து அணிகளும் தங்களது அணிக் கட்டமைப்பை இறுதி செய்துள்ளன. இதற்காக மொத்தம் ரூ.73.1 கோடி செலவிடப்பட்டது.

sophie molineux
sophie molineuxsource:cricnmore

ஏலத்தில் அணிகளின் வியூகங்கள் :

இந்த ஏலத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீராங்கனைகளுடன் இந்தியாவின் இளம் திறமையாளர்களையும் அணிகள் தேர்வு செய்திருப்பது தான் ‌.மொத்தம் 150 வீராங்கனைகள் ஏலப் போட்டியில் இடம் பெற்ற நிலையில் 25 பேர் மட்டுமே அணிகளால் வாங்கப் பட்டனர்..

ஏழு வெளிநாட்டு வீராங்கனைகளும் சர்வதேச போட்டிகளில் இன்னும் பெரிய அளவில் அறிமுகமாகாத 14 வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டனர்.. இதன் மூலம் அணிகள் உடனடி வெற்றிக்காக மட்டும் அல்லாமல் எதிர் கால அணி கட்டமைப்பையும் கருத்தில் கொண்டு செயல்பட்டிருப்பது தெரிகிறது..

உத்திரப் பிரதேச வாரியர்ஸ் அணிக்கு இந்த ஏலம் மிகவும் முக்கியமானதாக அமைந்தது‌‌.. அதிகபட்சமாக ரூ 3.75 கோடி தொகையுடன் ஏலத்தில் நுழைந்த அந்த அணி சோஃபி மோலின்யூவுடன் கிரேஸ் ஹாரிஸ்,சினே ராணா உள்ளிட்ட வீராங்கனைகளையும் தேர்வு செய்தது.

இதனால் பேட்டிங்,பந்து வீச்சு ஆகிய இரு துறைகளிலும் அணிக்கு கூடுதல் வலிமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. மறுபுறம், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சோஃபியைத் தவற விட்டாலும் ஜெஸ் ஜோனாசன் ,க்ளோய் ட்ரையன் போன்ற அனுபவமிக்க வீராங்கனைகளை தேர்வு செய்தது‌‌..இது போன்ற தேர்வுகள் அணியின் சமநிலையை மேம்படுத்த உதவும் ‌‌..

இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை வீராங்கனைகள் மைதானத்தில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே இறுதியில் முக்கியம்..ஏலத்தொகை கவனத்தை ஈர்க்கலாம்.. ஆனால் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவது தான் ஒவ்வொரு வீராங்கனையின் உண்மையான திறமையை நிரூபிக்கும்..

WPL ஏலம் என்பது வீராங்கனைகளை வாங்குவதற்கான நிகழ்வு மட்டுமல்ல; அவர்களின் திறமைக்கும் எதிர்கால வாய்ப்புகளுக்கும் கிடைக்கும் அங்கீகாரமாகவும் விளங்குகிறது. சோஃபி மோலின்யூவின் அதிகபட்சத் தேர்வுத்தொகையும், உமா காஷ்வி போன்ற இளம் வீராங்கனைகளுக்குக் கிடைத்த வாய்ப்பும் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் இந்த தொடரில் இளம் வீராங்கனைகள் தங்களது திறமையை நிரூபித்தால் எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்..இதனால் WPL தொடர் பொழுதுபோக்கைத் தாண்டி மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான முக்கிய மேடையாகவும் திகழ்கிறது..வரும் தொடரில் இந்த வீராங்கனைகள் தங்களது அணிகளுக்காக எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்தப் போகிறார்கள் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
வங்கியில FD போடுறீங்களா? இந்த 4 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!
sophie molineux
logo
Kalki Online
kalkionline.com