

”ஓ அவனா? பானிபூரி வாலாதானே!” என அவமரியாதையாக விமர்ச்சிக்கிறோம். ஆனால், அந்த பானிபூரி விற்பவனே ஒரு நாளில் பெரிய பிரபலம் ஆகி விட்டால் கைத்தட்டி வரவேற்கிறோம்.
அப்படி பானிபூரி விற்று பின்னாளில் பிரபலமானவர்தான் இந்த கட்டுரையின் கதாநாயகன்.
'யஷஸ்வி ஜெய்ஸ்வால்' (Yashasvi Jaiswal) ஐபிஎல் 2023 கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய ஆட்டக்காரர். ராஜஸ்தான் ராயல் 2023-ன் முக்கிய புள்ளி.
இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சிறிய பெட்டிக் கடைக்காரர் சூர்யவாஸ் பஹாதோஹி அவர்களின் மகனாக, உத்திரபிரதேசத்தில் பிறந்தார். பத்து வயதான பொழுது அங்கிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தார். அந்த வயதிலேயே கிரிக்கெட் பயற்சியை ஆரம்பித்து விட்டார்.
குடும்பத்து பெரியவர்கள் ”தம்பி படிடா… இந்த விளையாட்டெல்லாம் பசி ஆற்றாது” என அறிவுரையை ஆரம்பித்து விட்டனர். ஆனால் விடாப்பிடியாக கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினான் சிறுவன்.
அந்த சிறுவன் வசித்தது ஒரு டெண்ட் கொட்கை. அதில் கழிப்பிட வசதி, குளியல் அறை வசதி ஏதுமில்லை. அவனுடையை உணவை அவனே தயாரிக்க வேண்டிய கட்டாயம். சமைக்காவிட்டால் அன்று பட்டினிதான். அப்படி ஒரு வறுமை சூழல் அவனுக்கு வாய்த்திருந்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் (Yashasvi Jaiswal) மாமா ஒரு பால் வியாபாரி; அவர் ஒரு கடை வைத்திருந்தார். அந்த கடையிலேயே இரவில் தங்கி, அதிகாலையில் வீடுகளுக்கு பால் பாக்கெட் போட்டார் யஷஸ்வி. மாலை வேளைகளில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டார். ஒரு நாள் அந்த தங்குமிடத்திலிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
அங்கிருந்து வெளியேறிய ஜெய்ஸ்வால், ஒரு முஸ்லீம் அன்பர் அஸாத் மைதீன் அவர்கள் நடத்திவந்த யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் ஒரு பகுதியில் டெண்ட் அமைத்து அதில் தங்கி கிரிக்கெட் விளையாட்டு பயிற்சியை மேற்கொண்டார்.
அப்படி தங்கி இருந்த காலகட்டத்தில், மாலைப் பயிற்சி முடித்த பின் ஓய்வில்லாமல், இரவு வேளைகளில் அன்பர் அஸாத் மைதீன் அவர்களுடன் இணைந்து பானிபூரி விற்று சொற்ப வருமானத்தில் காலம் கழித்தார்.
தம்மை வறுமையிலிருந்தும், பசிப்பிணி போக்கி கொள்ளவும், இடையிடையே சிறுசிறு கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டார்.
இந்த சூழலில்தான், ஜூவாலா சிங் என்ற மனிதரை சந்தித்தார். அந்த நபர்தான் அவர் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் வழிகாட்டி என ஜெய்ஸ்வால் அப்பொழுது அறியவில்லை.
2019 உலக கோப்பை கிரிக்கெட் விளையாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் 400 ரன்கள் எடுத்து அந்த போட்டியின் சிறந்த விளையாட்டுக்காரர் என கௌரவிக்கப்பட்டார்.
பின்னர் ராஜஸ்தான் 2020 விளையாட்டில் 2.4 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஏலம் எடுக்கப்பட்டார். 2023 ஆட்டத்தின் போது 4 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஏலம் எடுக்கப்படும் அளவிற்கு தமது திறமையை வளர்த்து கொண்டார்.
கொல்கத்தா விளையாட்டு போட்டியில் திறம்பட விளையாடி வெற்றி பெற்றார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், வறுமையைப் போக்கி கொள்ள பானிபூரி விற்றாலும், விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும், வெற்றி பெற்று முன்னேறியுள்ள யாஸஸ்வி ஜெய்ஸ்வால் அவர்களை முன்மாதிரியாக கொண்டு இளைஞர்கள் முன்னேறலாம்.
இனி, ”ஓ அவனா? பானிபூரி வாலாதானே!” என அவமரியாதையாக விமர்ச்சிக்க மாடீங்கதானே!?!