

ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வது ஒவ்வொரு முறையும் நமக்குப் பெருமிதம் அளிக்கும் விஷயம். அதிலும் இளம் வயதிலேயே சர்வதேச அரங்கில் சாதனை படைக்கும் வீரர்களைப் பார்க்கும்போது எதிர்கால இந்திய விளையாட்டுத் துறையின் மீது நம்பிக்கை அதிகரிக்கிறது. அப்படியொரு மகிழ்ச்சியான செய்திதான் டாக்கரில் நடைபெற்று வரும் 2026 இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து கிடைத்திருக்கிறது.
செனகல் நாட்டின் டாக்கர் நகரில் நடைபெற்று வரும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை மகிழ்ச்சி கிடைத்துள்ளது.
மணிப்பூரைச் சேர்ந்த லைரென்லக்பாம் அம்பேகர் மீத்தேய், ஆடவர் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். கொலம்பியாவின் இஸான் ஜெஃப்ரி காலியா அரேவாலோவை எதிர்கொண்ட அவர், தொடக்கம் முதலே சிறப்பாகச் செயல்பட்டு 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். நடுவர்களின் ஏகமனதான தீர்ப்பு அவருக்குச் சாதகமாக அமைந்தது.
இதன் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர் ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2010 சிங்கப்பூர் இளைஞர் ஒலிம்பிக்கில் சிவா தாபா இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
இந்த முறை அந்த வரலாற்றை மாற்றி தங்கம் வெல்லும் வாய்ப்பு மீத்தேய்க்குக் கிடைத்துள்ளது. இறுதிப்போட்டியில் அயர்லாந்தின் கிறிஸ்டியன் ஜுபானியை அவர் எதிர்கொள்கிறார்.
மகளிர் பிரிவிலும் இந்தியாவுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை குஞ்சன், பிரிட்டனின் லில்லி பாசெட்டை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இந்த இரண்டு வீரர்களின் வெற்றியால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது இந்தியா எட்டு பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதில் மூன்று வெள்ளிப் பதக்கங்களும், ஐந்து வெண்கலப் பதக்கங்களும் அடங்கும். மேலும் இரண்டு வீரர்கள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பதால் குறைந்தபட்சம் பத்து பதக்கங்களை இந்தியா உறுதி செய்யும் நிலை உருவாகியுள்ளது.
2018-ம் ஆண்டு பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக்கில் இந்தியா 13 பதக்கங்களை வென்றதே இதுவரையிலான சிறந்த சாதனையாகும்.
இந்த வெற்றிகளுக்குப் பின்னால் பல ஆண்டுகாலப் பயிற்சியும் கடின உழைப்பும் மறைந்திருக்கின்றன.. குத்துச்சண்டை என்பது உடல் வலிமையை மட்டும் சார்ந்த விளையாட்டு அல்ல.. எதிராளியின் அடுத்த நகர்வைக் கணிப்பது, சரியான நேரத்தில் தாக்குதல் நடத்துவது,தற்காப்பில் கவனம் செலுத்துவது என ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருக்க வேண்டிய விளையாட்டு ..
அந்த வகையில் இளம் வயதிலேயே சர்வதேசப் போட்டிகளில் இந்திய வீரர்கள் வெளிப்படுத்தும் மன உறுதி பாராட்டுக்குரியது .குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் இருந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு இத்தகைய சர்வதேச வெற்றிகள் மிகப் பெரிய ஊக்கமாக அமைகின்றன.. தங்களாலும் உலக அரங்கில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்துகின்றன..
இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டுக்கு ஏற்கெனவே நல்ல வரவேற்பு உள்ளது..மேரி கோம், விஜேந்தர் சிங் போன்ற சாதனையாளர்கள் உருவாக்கிய பாதையில் அடுத்த தலைமுறை வீரர்களும் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. இளைஞர் ஒலிம்பிக் போன்ற போட்டிகள், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனுபவத்தையும் தன்னம்பிக்கையையும் வீரர்களுக்கு வழங்குகின்றன..
வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஓர் அங்கம். ஆனால் இளம் வீரர்களின் இந்த அசாத்தியமான முயற்சி இந்தியாவின் எதிர்கால விளையாட்டுத் திறனை உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.
டாக்கரில் இந்திய தேசியக் கொடி மேலும் உயரப் பறக்கட்டும்!