பலரும் முடி நரைப்பதை வயதானதன் அறிகுறியாகக் கருதுகின்றனர். முடி நரைப்பது வயதான செயல்முறையின் இயல்பான ஒரு பகுதியாக இருப்பினும், கருப்பு முடிகளுக்கு மத்தியில் வெள்ளை முடி தோன்றினால் பலரது அமைதி குலைந்து போகும். அதற்கு சில வாழ்வியல் முறைகளும் காரணமாக இருக்கலாம். தலை முடி நரைக்கும் செயல்முறையை மெதுவாக்க அல்லது ஆரோக்கியமாக முடியை பராமரிக்க நீங்கள் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். முடி நரைப்பதைக் குறைக்க உதவும் பத்து குறிப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சரிவிகித உணவை உண்ணுங்கள்: ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஆரோக்கியமான ஹேர் பிக்மென்ட்டேஷன் மற்றும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது. நரை முடியை தவிர்க்க குறிப்பாக வைட்டமின் பி12, பி5 மற்றும் பயோடின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்: நாள்பட்ட மன அழுத்தமானது முடியை முன்கூட்டியே நரைக்க வழிவகுக்கிறது. எனவே, உடற்பயிற்சி அல்லது யோகா போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிப்பது முக்கியமாகும்.
ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்கவும்: உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். உங்கள் உச்சந்தலையை தவறாமல் சுத்தம் செய்து, உங்கள் முடி வகைக்கு ஏற்ற லேசான ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்தவும். இயற்கையான மூலிகை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி வருவது நல்லது.
சூரிய ஒளியிலிருந்து முடியை பாதுகாக்கவும்: சூரியனின் அல்ட்ராவயலட் ரேடியேஷன்களின் அதிகபடியான வெளிப்பாடு முடியின் மயிர்க்கால்களை சேதப்படுத்தும் மற்றும் முன்கூட்டியே நரைக்க வழிவகுக்கும். எனவே, இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தொப்பிகளை அணிவதன் மூலம் உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கலாம்.
கடுமையான இரசாயனங்களைத் தவிர்க்கவும்: ஹேர் டைகள், ப்ளீச்கள் மற்றும் பெர்மிங் சொலுஷன்கள் போன்ற கடுமையான இரசாயனங்களை அடிக்கடி பயன்படுத்துவது முடியை சேதப்படுத்தும் மற்றும் முடியை நரைக்க வழிவகுக்கும். உங்கள் தலைமுடியை அடிக்கடி ஹீட் ஸ்டைலிங் செய்வதைத் தவிர்க்கவும். ஹீட் ஸ்டைலிங் உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும் மற்றும் உடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
இயற்கை வைத்தியம்: நெல்லிக்காய் எண்ணெய் அல்லது பேஸ்ட், தேங்காய் எண்ணெய் அல்லது வெங்காய சாறு போன்றவற்றை உங்கள் உச்சந்தலையில் தேய்ப்பதால் மயிர்கால்கள் வலுப்பெற்று, முடி நரைக்கும் செயல்முறையை மெதுவாக்க உதவும் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. முடி வளர்ச்சி அதிகரிக்க தேங்காய் எண்ணெய் சிறந்தது. ஆய்வு ஒன்றின்படி, தேங்காய் எண்ணெய் லகுவாக இருப்பதால் முடியில் எளிதில் உறிஞ்சப்பட்டு முடிக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது தவிர, தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முடியின் புரத இழப்பு மற்றும் முடி சேதம் ஆகிய இரண்டையும் குறைக்க உதவுகிறது.
போதுமான தூக்கம்: போதுமான தூக்கம், முடி ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. எனவே, நீங்கள் தினமும் 7 முதல் 8 மணி நேர தரமான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
சப்ளிமெண்ட்ஸ் பயனுள்ளதா என்பதை கவனியுங்கள்: முடி நலனுக்கு வைட்டமின் பி12, பயோட்டின் அல்லது கேடலேஸ் போன்ற சப்ளிமெண்ட்ஸை எடுத்துக்கொள்வது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்குமா என்பதை தீர்மானிக்க ஒரு சிறந்த மருத்துவரை ஆலோசித்து பின்னர் பயன்படுத்துங்கள்.
புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்: புகைப்பிடித்தல் முடியை முன்கூட்டியே நரைக்க வழிவகுக்கிறது. எனவே, புகைப்பிடிப்பதை நிறுத்துவது நரைக்கும் செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது.
இயற்கை அழகை ஏற்றுக்கொள்ளுங்கள்: இறுதியாக, முடி நரைக்கும் இயற்கையான செயல்முறையை ஏற்றுக்கொள்வது, வயதானதைப் பற்றிய நேர்மறையான அணுகுமுறையை பராமரிக்க உதவுகிறது. உங்கள் இயற்கை அழகை ஏற்றுக்கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.