சீனி துளசி அல்லது சர்க்கரை துளசி இனிப்புத் தன்மை கொண்ட தாவரம். இது மிட்டாய் இலை, இனிப்பு இலை, சக்கரை இலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ‘ஸ்டீவியோ ரியோடியானா’என்னும் மருத்துவப் பயிர். இது சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் பொருள் சர்க்கரைக்கு மாற்றாக நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், பரகுவை போன்ற ஈரப்பதம் மிகுந்த பிராந்தியங்களில் செழித்து வளரக்கூடியது. இங்குள்ள குவாரனி என்னும் பூர்வீக குடிமக்களால் சுமார் 1500 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது பரந்த புல்வெளிகளிலும் மலைப் பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது. 2 அடி முதல் 3 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்தத் தாவரம் இயற்கை உரம் மற்றும் மக்கிய தொழு உரத்தில் மட்டுமே வளரும். இத்தாவரத்தின் பூக்கள் வெள்ளை நிறத்திலும் விதைகள் கருமை நிறத்திலும் காணப்படும். சர்க்கரை நோயாளிகள் இனிப்புப் பொருட்களை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்தும் சூழலில் சீனி துளசி சர்க்கரைக்கு ஒரு நல்லதொரு மாற்றாகும்.
சர்க்கரை, வெல்லத்தை விட பல மடங்கு இனிப்பு சுவை உடையது. ஆனாலும், இதைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களால் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. சர்க்கரை நோய் ஏற்படவும் வாய்ப்பில்லை. மிகக் குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட சர்க்கரை உணவு இது. இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தக்கூடியது.
சீனி துளசி சர்க்கரைக்கு ஒரு மாற்றாக உள்ளது. இதன் இலைகளை உலர வைத்து பொடியாக்கி தேயிலை தூளுடன் கலந்து டிப் டீ பேக் வடிவில் விற்கப்படுகிறது. இதய நோயை குணப்படுத்தும் மருந்துகளிலும் சீனி துளசி சேர்க்கப்பட்டுள்ளது. செரிமான கோளாறுகளை சீராக்கும் தன்மை கொண்டது. சரும நோய்களைத் தீர்க்கும் மருந்துகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து சர்க்கரையும் தயாரிக்கப்படுகிறது. சுகர் ஃப்ரீயைப் போல சீனி துளசியை சர்க்கரைக்கு மாற்றாகத் தயாரித்து விற்கிறார்கள். இதன் இலைகளை நன்றாகக் காய வைத்து அதன் மீது சூடான நீரைப் பாய்ச்சி அதிலிருந்து ஸ்டீவியா என்ற பொருள் பிரித்தெடுக்கப்பட்டு பொடியாக்கி அதை தேயிலைத் தூளுடன் கலந்து இன்ஸ்டன்ட் டீ பேக்காக விற்கிறார்கள். இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
இவை நாற்றுப் பண்ணைகள், நர்சரி கார்டனங்களில் கிடைக்கும். அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களிலும் செடி மற்றும் விதைகள் விற்கப்படுகின்றன. சீனி துளசி கரும்பை விட 30 மடங்கு அதிக இனிப்பு சுவை கொண்டது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
இதன் நன்மைகள்:
* இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை.
* கலோரிகளை உருவாக்குவதில்லை. அத்துடன் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிப்பதில்லை.
* இதன் பொடியை டீ, காபி, பாயசம், ஜூஸ் போன்றவற்றிற்கு சர்க்கரைக்கு பதிலாகப் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதும் கிடையாது.
* இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தக் கூடியது.
* இதய நோயை குணப்படுத்தும் மருந்துகளிலும், சரும நோய்களைத் தீர்க்கும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.