ஊட்டச் சத்துக்களின் பவர் ஹவுஸ் என்று அழைக்கப்படுபவை பீன்ஸ். இதில் பத்து வகை உண்டு. ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான சுவையும் சத்துக்களும் கொண்டவை. அந்த 10 வகை பீன்ஸின் முழு விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.
1. அட்ஸுகி (Adzuki) பீன்ஸ்: இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புரோட்டீன் மற்றும் நார்சத்துக்கள் உள்ளன. இவை, முறையே உடலின் வீக்கங்களைக் குறைக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும், சீரான செரிமானத்துக்கும் உதவி புரியும்.
2. பின்டோ பீன்ஸ்: இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்க உதவும். ஃபொலேட் சத்து செல்களின் வளர்ச்சி மற்றும் அவற்றின் சிறப்பான செயல்பாட்டிற்கும் உதவும்.
3. பட்டாணி (Peas): தாவர வகை புரோட்டீனை அதிகளவு தரக் கூடியது. மேலும் இதில் வைட்டமின் A, C, K ஆகியவையும் நிறைந்துள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும்.
4. கொண்டைக் கடலை (Chick Peas): இதில் புரோட்டீன் மற்றும் நார்சத்துக்கள் மிக அதிகம். இவை தசைகளின் கட்டமைப்பிற்கும் செரிமானம் தங்கு தடையின்றி நடைபெறவும் உதவும். உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கக் கூடிய வைட்டமின்களும் கனிமச் சத்துக்களும் இதில் அதிகம் உள்ளன.
5. சோயா பீன்ஸ்: இதிலும் புரோட்டீன் சத்து மிக அதிகம். வெஜிட்டேரியன் மற்றும் வேகன்களிடையே இது மிகவும் பிரபலமானது. இதிலுள்ள ஐசோஃபிளவோன்ஸ் (Isoflavones) என்ற கூட்டுப்பொருள் சில வகை கேன்சர்கள் வரும் அபாயத்தைத் தடுக்க வல்லவை.
6. நவி பீன்ஸ் (Navy Beans): இதில் நார்ச்சத்துக்களுடன் குறைந்த அளவு கொழுப்புச் சத்து உள்ளது. இதனால் இது இதய ஆரோக்கியம் காப்பதில் பிரதானமான உணவாகக் கருதப்படுகிறது. மேலும் இது இரத்த சர்க்கரை அளவை சம நிலைப்படுத்த உதவுவதால் நீரிழிவு நோயாளிகளும் உண்பதற்கு ஏற்ற உணவாகிறது.
7. காராமணி (Black-Eyed Peas): இந்தப் பயறில் உள்ள ஃபொலேட் என்ற பொருள் மூளையின் ஆரோக்கியம் காக்க பெரிதும் உதவுகிறது. பிறப்பிலேயே உண்டாகக்கூடிய உடல் நலக் கோளாறுகளையும் தடுக்கக் கூடியது காராமணி. இதிலுள்ள கால்சியம் சத்து எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரிகிறது.
8. லீமா பீன்ஸ் (Lima Beans): இதில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் அதிகம். இவை உடலுக்கு மணிக்கணக்கில் தொடர்ந்து சக்தியளிக்கக் கூடியவை. இதில் உள்ள பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துகள் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் குணம் கொண்டது.
9. கிட்னி பீன்ஸ் (Kidney Beans): கிட்னி பீன்ஸில் இரும்புச் சத்து மிக அதிகம். இது இரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துக்களையும் உடல் முழுவதும் கொண்டு சேர்க்க உதவும். இதிலுள்ள நார்ச்சத்து சீரான செரிமானத்துக்கும் எடைப் பராமரிப்பிற்கும் நல்ல முறையில் உதவும்.
10. பிளாக் பீன்ஸ்: இதில் உள்ள அதிகளவு புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் செரிமானம் சிறப்பாக நடைபெறவும் உடலுக்கு தொடர்ந்து சக்தி கிடைக்கவும் உதவும். இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க உதவும்.
இத்தனை சத்துக்கள் நிறைந்த பீன்ஸ் வகைகளில் ஒன்றை தினசரி உணவில் சேர்த்து உட்கொண்டு ஆரோக்கிய நன்மை பெறுவோம்.