
வயிற்றுப்புண் என்பது வயிற்றில் வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். வயிறு காலியாக இருக்கும்பொழுது அதாவது இரண்டு உணவுகளுக்கு இடையில் அல்லது இரவில் அடிக்கடி வலி ஏற்படும். உணவு எடுத்துக்கொண்டால் தற்காலிகமாக நிவாரணம் கிடைக்கும். குமட்டல், வாந்தி, பசி இழப்பு போன்ற அறிகுறிகள் தென்படும். வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் சில:
மஞ்சள் தூள்: மஞ்சள் ஒரு சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த ஒன்று. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் மஞ்சள் தூளைக் கலந்து குடிப்பது எளிமையான மற்றும் சக்தி வாய்ந்த பலனைத் தரும் பொருளாகும்.
பயத்தம் பருப்பு கஞ்சி: பயத்தம் பருப்பு உடலுக்கு குளிர்ச்சியை தரும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். இதனைக் கொண்டு கஞ்சி தயாரித்து தேங்காய்ப்பால் கலந்து பருகுவது வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
மணத்தக்காளி கீரை: மணத்தக்காளி கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனை வடிகட்டி பருக வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். கீரையின் சாறை அப்படியே பருக தயங்குபவர்கள் சிறிது மோர் மற்றும் உப்பு கலந்து பருகலாம். மணத்தக்காளி கீரை வாய்ப்புண் மற்றும் வயிற்று புண்ணிற்கு மிகவும் சிறந்தது.
அகத்திக்கீரை: அகத்திக்கீரையை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து அத்துடன் 2 பூண்டு பற்கள், 4 சின்ன வெங்காயம், 1/2 ஸ்பூன் சீரகம், சிறிது மஞ்சள் தூள், 2 ஸ்பூன் துவரம்பருப்பு, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் எடுத்து மிக்ஸியில் அடித்து சூப் செய்து குடித்து வர வயிற்றுப் புண் காணாமல் போய்விடும்.
தேங்காய் பால்: வயிற்றுப்புண் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் அரை கப் தேங்காய்ப் பால் பருகிவர வயிறு குளிர்ச்சி அடையும். வாய்ப்புண், வயிற்றுப்புண் போகும். ஒரு கப் ஃபிரஷான தேங்காய்த் துருவலை வெதுவெதுப்பான நீர் கொண்டு அரைத்துப் பிழிய தேங்காய் பால் தயார்.
நாட்டு நெல்லிக்காய்: நாட்டு நெல்லிக்காயை சுத்தம் செய்து நறுக்கி கொட்டைகளை நீக்கி விட்டு மிக்ஸியில் அடித்து சாறெடுத்து பருகலாம். அல்லது தயிர் பச்சடி போல் செய்து சாப்பிட வயிற்று புண் சரியாகும். ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முறைகளில் நெல்லிக்காய் ஒரு சிறந்த மருத்துவ மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
அதிமதுர தேநீர்: ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதில் 1/2 ஸ்பூன் அதிமதுரத் தூளைக் கலந்து சிறிது கொதித்ததும் இறக்கி விடவும். சிறிது ஆறியதும் வடிகட்டி 1 ஸ்பூன் தேன் கலந்து பருக வயிற்றுப் புண்ணிற்கு நல்லது.
கற்றாழை: சுத்தமான கற்றாழை ஜெல்லை தொடர்ந்து உட்கொள்வது வயிற்றை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன் வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சலையும் போக்க உதவும்.
தேன்: ஆயுர்வேத மருத்துவ முறையில் பயன்படுத்தப்படும் சிறந்த மருந்துப் பொருள் இது. வயிற்றுப் புண்ணை குணப்படுத்துவதில் சிறந்த ஆற்றல் மிக்கது. ஒரு ஸ்பூன் தேனை நேரடியாகவே உட்கொள்ளலாம் அல்லது ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் தேனைக் கலந்து பருகலாம்.
இஞ்சி: அஜீரணம், வாயு போன்ற இரைப்பை நோய்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். இவை வயிற்று வலி மற்றும் வயிற்றுப் புண்களுக்கும் ஏற்றது. இதனை சூப்புகளிலும், சாலடுகளிலும், சமைக்கும் பிற உணவுப்பொருட்களிலும் கலந்து சமைக்க நல்ல பலனை பெறலாம்.
மோர்: மோரில் உள்ள புரோபயாட்டிக் பண்புகள் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் உடலையும், குடலையும் குளிர்ச்சியடையச் செய்யும். அல்சரை வேகமாக குணப்படுத்தும். மோரில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து பருகி வர நல்ல குணம் தெரியும்.
வயிற்று புண்ணிற்கு வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்து கொள்வது நல்லது.
காஃபின், ஆல்கஹால், கார்பனேட்டட் பானங்கள், அமிலத்தன்மை நிறைந்த சிட்ரஸ் பழங்கள் போன்ற எரிச்சலூட்டும் உணவுகளை தற்காலிகமாக தவிர்ப்பதும், அதிக காரமான உணவுகளை தவிர்ப்பதும், வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)