

வீட்டு வைத்தியக் குறிப்புகள் (Home Remedies) என்பவை, மருத்துவம் சார்ந்த நவீன சிகிச்சைகளுக்கு பதிலாக, வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்கள் (மசாலாப் பொருட்கள், காய்கறிகள், மூலிகைகள் போன்றவை) மற்றும் பாரம்பரிய அறிவைப் பயன்படுத்தி, சளி, காய்ச்சல், வயிற்று வலி, நெஞ்செரிச்சல் போன்ற சிறிய உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இயற்கையான, பழமையான முறையாகும். இவை பெரும்பாலும் 'உணவே மருந்து' என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. இது தலைமுறை தலைமுறையாகப்பயன்படுத்தப்படும் 'பாட்டி வைத்தியம்' போன்ற பாரம்பரிய முறைகளின் ஒரு பகுதியாகும். இன்று பல்வேறு உடல் உபாதைகளை குணமாக்கும் 12 பாரம்பரிய வைத்தியக் குறிப்புகளை பற்றி இங்கேபார்க்கலாம்.
1. ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு, சிறிது பனை வெல்லம் போட்டுக்கலக்கி சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கி விடும்.
2. தலையில் நீர்கோர்த்து ஏற்படும் தலைவலிக்கு சுக்கு, பெருங்காயத்தை பால் விட்டு உரசி நெற்றியில் பற்று போட்டால் சட்டென்று தலைவலி மறையும்.
3. வெங்காயத்தை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொண்டால் வெயிலினால் ஏற்படும் உடல் அரிப்பைத் தவிர்க்கலாம்.
4. திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வாருங்கள். வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் குணமாகும்.
5. சாதம் வடித்த நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும், பனங்கற்கண்டும் சேர்த்துக் கலக்கி வெது வெதுப்பாக இருக்கும் போதே குடிக்க வயிற்று உப்புசம் விலகிவிடும்.
6. இரவு சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு ஆரஞ்சுப் பழத்தின் சாற்றுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகினால் வருவது சுக நித்திரை.
7. புதினா இலைகளைக் காயவைத்து, உப்பு சேர்த்து பவுடராக்கி, அதைக்கொண்டு பல்துலக்கி வந்தால் பெரும்பாலான பல் உபாதைகள் நீங்கி விடும்.
8. குடிக்கும் நீரைக் காய்ச்சும் போது சிறிதளவு சுக்கைத் தட்டிப்போட்டு வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். இது ஜீரணத்துக்கு ஏற்றது மட்டுல்லாமல் வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற வியாதிகளையும் போக்கும்.
9. அடிக்கடி இருமல், தும்மல் ஏற்படுகிறதா? அகத்திக்கீரை சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
10. ஜவ்வரிசியை சாதம்போல் வேக வைத்து, மோரில் கரைத்து, உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் நிச்சயம்.
11. புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
12. பத்து மிளகுடன் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலையை சேர்த்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.