

* துளசி இலை, வில்வ இலை, வேப்ப இலை, கடுக்காய், சந்தனக் கட்டை, மிளகு, சித்தரத்தை இவற்றை சம அளவில் எடுத்து அரைத்து வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்திக் கொண்டு, காய்ச்சல் வரும் போது அரை கரண்டி காலை, மாலையில் வெந்நீரில் கலந்து குடிக்க காய்ச்சல் சரியாகும்.
* ஓமத்தை இடித்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியவுடன் நல்லெண்ணெய், பச்சை கற்பூரம் சேர்த்து காய்ச்சி கொள்ளவும். இந்த தைலத்தை வலி குத்தல் இருக்கும் இடத்தில் தடவி வர வாதம் ரோகம் குணமாகும்.
* கீழே விழுந்தோ அல்லது உராய்ந்தோ சிராய்ப்பு ஏற்பட்டால் இரத்தம் வரும். அதற்கு இலவம் பிசினை பொடி செய்து இரத்த காயத்தின் மீது தடவி வர உடனே ஆறும்.
* பசும்பால் 400 மில்லி, பசு நெய் 50 மில்லி, வெங்காய சாறு 100 மில்லி, அதிமதுரம் 20 கிராம் பொடி அடுப்பில் வைத்து காய்ச்சி நல்ல பதத்தில் இறக்கி ஆறவைத்து அதனை நாள் தோறும் ஒரு வேளை ஒரு தேக்கரண்டி வீதம் 10 தினங்கள் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.
* வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் நறுக்கி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தி கொள்ளவும். இதனை தினமும் பருக்கள் மீது தடவி வர முகப்பருக்கள் மறையும்.
* விளாம்மர பிசினுடன் அதே அளவு வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து குடித்து வர இரத்த கடுப்பு குணமாகும். தேங்காய், வெள்ளைப் பூண்டையும் சேர்த்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர நாள்பட்ட பேதி குணமாகும், மூன்று வேளையும் குடிக்கலாம்.
* கிச்சிலி கிழங்கை வில்லைகளாக நறுக்கி காய வைத்து இடித்து தூளாக்கி வைத்துக் கொண்டு வாய் நாற்றம் உள்ள நேரங்களில் வாய் கொப்பளித்து வர வாய் நாற்றம் நீங்கும்.
* மணத்தக்காளி இலையை வதக்கி அதனுடன் வெந்தயம் 20 கிராம், வெங்காயம் 10 கிராம், ஏலரிசி 5 கிராம் போட்டு லேசாக வறுத்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து காலை, மாலை பருகி வர இருமல் குணமாகும்.
* வேப்பம் பூவை உப்பு போட்டு மோரில் ஊறவைத்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியை அரை ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிட வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
* செம்பருத்தி பூவை சேகரித்து உலர்த்தி பொடி செய்து அதனுடன் கற்கண்டு சேர்த்து வைத்துக் கொள்ளவும். அதனை தினமும் பாலில் அல்லது வெந்நீரில் கலக்கி வடிகட்டி குடிக்க உடல் பலம் அதிகரிக்கும்.
* எருக்கம் பூவை நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி ஆறவைத்து அந்த எண்ணெய்யை கழுத்தில் தேய்த்தும், தலைக்கு தேய்த்தும் வர சிறிது நாட்களில் கழுத்து வலி நின்று விடும்.
* உடலில் கொப்பளம் ஏற்பட்டால் 50 கிராம் இஞ்சியை காயவைத்து வெந்நீரில் தட்டிப் போட்டு அரை மணிநேரம் ஊறிய பின் அதில் வெந்நீரில் கலந்து குளித்து வந்தால் கொப்பளம் விரைவில் மறையும்.
* மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு இம்மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்று போட சுளுக்கு உடனே குணமாகும்.
* கீழாநெல்லி செடியை சுத்தம் செய்து நீர்விட்டு அரைத்து இரண்டு மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாக தயாரித்து கொள்ளவும். அந்த தைலத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர கண் எரிச்சல், நீர் வடிதல் குணமாகும்.
* புதிதாக பறித்த புளியம் பூவை சுத்தமான நீரில் கழுவி மை போல் அரைத்து அந்த விழுதை கண்ணின் மீது வைத்து துணியால் கட்டிக் கொண்டு இரவு படுத்து காலையில் கட்டை அவிழ்த்தால் கண் வலி உடனே குறையும்.
* தேங்காய் எண்ணெயில் சிறிது பெருங்காயத்தை போட்டு பொரித்ததும் சிறிது நேரம் ஆற வைத்த பின்னர் அந்த எண்ணெயை இரண்டு சொட்டு காதில் விட காது குத்தல் உடனே நிற்கும்.
* கை, கால் மரத்து உணர்வில்லாமல் இருந்தால் 50 கிராம் வேப்ப எண்ணெயில் கட்டி கற்பூரம் ஊற வைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் சொரணை இல்லாத பாகத்தில் சூடு பறக்க தேய்த்து வர நாளடைவில் உணர்வு திரும்பும்.
* பூண்டுடன், ஓமம் பொடி செய்து போட்டு கஷாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின் வாந்தி குணமாகும்.
* வெள்ளைப் பூண்டு, வெற்றிலை காம்பு, வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளின் மாந்தம் குறையும். சளி தொல்லை நீங்கும்.
* வாத நாராயணன் இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து காலை, மாலை 10 கிராம் எடுத்து ஒரு கரண்டி தேனுடன் கலந்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், ஆரோக்கியம் கூடும்.