
இந்த விஞ்ஞான உலகில் நாம் இருந்தால் கூட, நம் பழமை வாய்ந்த பாட்டி வைத்தியம் அதிக பக்க விளைவுகளன்றி சட்டென்று பலன் தரக்கூடியது.
1. தலைவலி குறைய
கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய் , சர்க்கரை கலந்து சூடு செய்து மிதமான சூட்டில் நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.
வெற்றிலையை பிடித்து சாறு பிழிந்து இந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து கலந்து இரண்டு பொட்டு பகுதியிலும் கனமாக பூசி வந்தால் தலைவலி குறையும்.
2. வாய்ப்புண் குறைய
மோரில் சிறிது உப்பை சேர்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வைத்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். அல்லது மோரில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து வாயில் ஐந்து நிமிடம் வைத்திருந்து கொப்பளிக்க வேண்டும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குறையும்.
3. பல்வலி குறைய
பல்வலி வரும் போது கிராம்பை இடித்து பொடி செய்து பல்லில் தடவினால் வலி குறையும்.
மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.
4. கால் ஆணி
அத்திக்காயை நன்கு அரைத்து வடிகட்டி அதன் சாற்றை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும் கால் மிருதுவாகும்.
மல்லிகை இலைகளை பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.
5. ஒற்றைத் தலைவலி.
ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது ஒரு டம்ளர் கேரட் சாறு, சிறிது வெள்ளரிக்காய் சாறு, பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
முட்டைக்கோஸ் இலைகளை நன்கு கல்லில் நசுக்கி சுத்தமான துணியில் வைத்து கட்டி அதைக் கொண்டு தலையில் ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
6. நினைவாற்றல் பெருக
10 கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.
வல்லாரைக் கீரையை தினம் துவரம்பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட நினைவாற்றல் பெருகும்.
7. மூலம் குறைய
கண்டங்கத்திரி பூ 3, நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன், வேப்ப எண்ணெய் ஒரு ஸ்பூன் ஆகியவற்றில் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.
திப்பிலி, சுக்கு, எள் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து பொடி செய்து ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனில் இலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.
8. தூக்கமின்மை குறைய.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து (நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்ட வேண்டும்). வெங்காய தண்ணீரை எடுத்து இரவி சாப்பிடும் சுடு சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை குறையும்.
நல்லெண்ணையில் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் போது சிறிது எண்ணெயை உச்சந் தலையில் நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.
9. கழுத்து சுளுக்கு குறைய
ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணி நேரம் கழித்து வென்னீரால் உருவிவிட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.
சம அளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருந்த இடத்தில் தடவி விட்டால் சுளுக்கு குறையும்.
10. விக்கல் குறைய
விக்கல் வரும் போது ஒரு கிண்ணம் அளவு தயிர் எடுத்து சிறிது உப்பு போட்டு மெதுவாக ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.
துளசி இலைகளை பச்சையாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வந்தாலும் விக்கல் குறையும்.
11. சளி குறைய
வெற்றிலை சாற்றை கொதிக்க வைத்து பின்பு ஆற வைத்து நெற்றிப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் ஓயாத சளி குறையும்.
தூதுவளை சாறு ,துளசி இலைச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு அவுன்சு வீதம் சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
12. இருமல்
கிராம்பை இடித்து பொடி செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் குறையும்.
வேலி பருத்திச் சாறு, துளசி சாறு, பசு வெண்ணெய்,கருஞ்சீரகம் சேர்த்து காய்ச்சி வடித்து காலை மாலை என சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
13. ஏப்பம் குறைய.
வேப்பம்பூவை தூள் செய்து சிட்டிகை எடுத்து இஞ்சி சா சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
14. வயிற்றுக் கடுப்பு குறைய
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த நீரில் சிறிது உப்பும் ,வெண்ணெய் கலந்து குடித்தால் சிறிது நேரத்திலேயே வயிற்றுக் கடுப்பு குறையும்.
15. கெட்ட கொழுப்பு குறைய
லவங்கப்பட்டையுடன், வேப்பிலை மற்றும் மிளகு சம அளவில் எடுத்து சேர்த்து மைய அரைத்து அதிகாலையில் சிறிதளவு சாப்பிட்டு வர இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)