குளிர்காலத்தில் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளால் நுரையீரல் ஆரோக்கியம் குறையும். இதன் காரணமாக நுரையீரலின் செயல் திறன் குறையும். இதனைத் தவிர்க்க குளிர்காலத்தில் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவும் சில யோகாசனங்களை செய்து வரலாம். இதன் மூலம் சுவாசத்தின் செயல்திறனை அதிகரிப்பதோடு, நுரையீரல் ஆரோக்கியமும் மேம்படும்.
முட்டி போடுவது போன்ற நிலைக்கு வந்து இடுப்பு பகுதியில் கைகளை வைக்காமல் உயரே உயர்த்திக் கொள்ளவும். வலது கையை பின்னோக்கி கொண்டு வந்து, வலது காலின் குதிகாலை பிடிக்கவும். முடிந்த அளவு இடுப்பை வளைக்காமல் முதுகை வளைத்துக் கொள்ளவும்.
தலையை பின்னோக்கி மார்புப் பகுதியை முன்னோக்கி நன்றாக விரித்து ஒரு பத்து வினாடிகளுக்கு அப்படியே இருக்கவும். பின் வலது கையை மேலே உயர்த்தி இடது கையை பின்னோக்கி கொண்டு வந்து இடது கால் குதிகாலை பிடித்து, அதே போஸில் பத்து வினாடிகளுக்கு இருக்கவும்.
உஸ்த்ராசனம் செய்வதன் மூலம் மார்புப் பகுதி நன்றாக விரிவடையும். இதன் காரணமாக நுரையீரல் மற்றும் உதரவிதானம் நீட்சியடையும். இதன் மூலம் நுரையீரல் திறனை மேம்படுத்தப்படுவதோடு, குளிரால் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், ஆழ்ந்த சுவாசத்தை ஊக்குவிக்கவும் முடியும். இந்த உஸ்த்ராசனம் ஒட்டுமொத்த சுவாச செயல்பாட்டையும் மேம்படுத்தும்.
உங்கள் முதுகை தரையில் வைத்து படுத்துக் கொள்ளவும். பின் கால்களை தரையில் அழுத்தி முழங்கால்களை முன்னோக்கி வளைத்துக் கொள்ளவும். கால்களில் அழுத்தம் கொடுத்து, இடுப்பை மேலே உயர்த்தவும். தோள்பட்டையை கீழே அழுத்தி, முதுகின் கீழ் பக்கம் உங்களின் கைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும்.
சுமார் 20 நொடி முதல் 30 நொடி வரை அதேநிலையில் இருந்து, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து பின்னர் மெதுவாக வெளியிட்டு, இடுப்பை மீண்டும் கீழே கொண்டு வரவும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் மார்பு, நுரையீரல் மற்றும் தொண்டை பகுதி நன்றாக திறக்கப்பட்டு சிறந்த காற்றோட்டம் ஊக்குவிக்கப்படும். அதோடு, சுவாச தசைகளை பலப்படுத்தவும், ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கவும் உதவும். மேலும், சேது பந்தாசனம் செய்வது முதுகு தசைகள் மற்றும் முதுகெலும்பை பலப்படுத்தவும் உதவும்.
புஜங்காசனம் அல்லது கோப்ரா நிலை என்று அழைக்கப்படும் இந்த ஆசனத்தை செய்வது மிகவும் எளிதானது. நெஞ்சுப்பகுதி தரையில் இருப்பது போல் குப்புறப் படுத்துக் கொள்ளவும்.
பின்னர் பாம்பு படமெடுப்பது போல் நெஞ்சுப் பகுதியை நன்றாக நிமிர்த்தி, தலையை நேராக வைக்கவும். பின்னர் தோள்களை தளர்வாக விட்டு, உள்ளங்கையை தரையில் ஊன்றிக் கொண்டு ஆழமாக சுவாசித்து, 15 முதல் 20 வினாடிகள் அப்படியே இருக்கவும். பின் மூச்சை மெதுவாக வெளிவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும்.
இந்த கோப்ரா நிலை மார்பை விரிவு செய்து, நுரையீரலையும் விரிவுபடுத்தும். அதோடு, நுரையீரல் திறன் மற்றும் நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் அதிக அளவில் செல்வதையும் உறுதிப்படுத்தும். அதோடு, இந்த ஆசனம் உதரவிதானத்தை பலப்படுத்தி, சளியை போக்கவும் உதவும்.
தனுராசனம் செய்ய முதலில் குப்புற படுத்து கால்களை பின்னோக்கி வளைத்து முதுகுக்குப் பின் கொண்டு வரவும். வளைத்த கால்களை கைகளால் இறுகப் பிடித்துக் கொள்ளவும். தலை மற்றும் கழுத்துப் பகுதியை நன்றாக நிமிர்த்திக் கொள்ளவும். இதேபோல் மூன்று முதல் ஐந்து முறை செய்யலாம். இந்த போஸில் உங்களின் வயிற்றுப் பகுதி முழுமையாக தரையில் அழுத்தி இருக்க வேண்டும்.
தனுராசனத்தை செய்வதன் மூலம் மார்பு மற்றும் நுரையீரல் விரிவுபடுத்தப்படும். அதோடு, நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவும் அதிகரிக்கும். இதனால் சுவாசம் மேம்படும். அதோடு, மார்பு இறுக்கத்தைக் குறைத்து, நெஞ்சில் உள்ள சளியை சுத்தப்படுத்தவும் இந்த தனுராசனம் உதவும்.
காற்று மாசுபாடு மற்றும் குளிர்கால பிரச்னைகளில் இருந்து உங்களின் நுரையீரலை காத்து அதனுடைய செயல்பாட்டை மேம்படுத்த யோகசனங்கள் மட்டுமின்றி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை, சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய உணவுகளையும் தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.