அறுசுவைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான முதல் சுவை இனிப்பு. அதனால்தான் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இனிப்பு சுவையை கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்கள் ஏராளம். அந்த வகையில். இனிப்பு சுவையை ருசிக்கும் ஆசையை அடக்கும் 5 வகை உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பெரீஸ்: இனிப்பு உண்ண வேண்டும் என்ற ஆசை எழுந்த உடனேயே முதலில் ப்ளூபெரீஸ், ஸ்ட்ராபெரீஸ் போன்ற பெரீஸ்களை சாப்பிட வேண்டும். பெரீஸ்களில் ஆன்டி ஆக்சிடென்ட், நார்ச்சத்து, நீர் சத்து அதிகம் இருப்பதால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையை அடக்கும். மேலும், இதில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதால் அதிகமாக சாப்பிட்டாலும் குறைந்த கலோரி உடையதாகத்தான் இருக்கும்.
2. டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருப்பதால் இவை இனிப்பு ஆசையை கட்டுப்படுத்துகிறது. இதில் குறைந்த சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதோடு, இதில் உள்ள 70 சதவிகித கோக்கோ உங்களது இனிப்பு ஆசையை அடக்குவது மட்டுமின்றி, சமச்சீரான உணவு முறைக்கும் உபயோகமாக இருக்கும்.
3. கிரீக் யோகர்ட்: கிரீக் யோகர்டில் அதிக புரதச்சத்தும், நார்ச்சத்தும் மிகுந்து காணப்படுவதால் வயிறு நிறைந்த மற்றும் திருப்தியான உணர்வு ஏற்படும் என்றாலும், ஊட்டச்சத்துக்காக பழங்கள், நட்ஸ் ஆகியவற்றையும் இத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
4. நட்ஸ், விதைகள்: நட்ஸ், விதைகள் ஆகியவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை இருப்பதோடு, இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையை ஆற்றும் தன்மையுடையதாகவும் இருக்கின்றன. குறிப்பாக, பாதாம், பூசணி விதைகள், சியா விதைகள், முந்திரி ஆகியவை உங்களுக்கு நன்கு கைக்கொடுக்கும்.
5. சர்க்கரை வள்ளிக்கிழங்கு: சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் ஆற்றல் கிடைப்பதோடு, வயிறு நிரம்பிய உணர்வையும் உண்டாக்குகிறது. இதில் உள்ள இயற்கையான இனிப்பு சுவை இனிப்பு ஆசையை அடக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
மேற்கூறிய ஐந்து வகை உணவுகளும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலை அதிகரிக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமில்லாமல், மற்ற அனைவருக்கும் கூட உபயோகமாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயம் இல்லை.