வாய்ப்புண், நம்மைப் பேசுவது, சிரிப்பதற்குக் கூட வலி மிகுந்த உணர்வாக மாற்றி விடும். வாய்ப்புண் சிறு காயங்கள், மன அழுத்தம் மற்றும் ஒருசில உணவுகளின் காரணமாக ஏற்படுவதால், தாமாக ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் அது சரியாகிவிடும் என்றாலும், விரைவான அசௌகரியத்தை போக்குவதற்கு இயற்கையான 5 வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தேங்காய் பால்: வாய்ப்புண்களுக்கு எதிராக வலிமையான பாதுகாப்பு தருவதற்கு தேங்காய்ப் பால் உதவும் என்பது ஒரு ஆய்வில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் வீக்க எதிர்ப்புப் பண்புகள், வலி மற்றும் வீக்கத்தைக் குறைத்து புண் இருக்கும் பகுதியில் இயற்கையான குளுமையை அளித்து புண்களை ஆற்றுகிறது. இதற்கு தேங்காய் பாலை வாயில் ஊற்றி 30 வினாடிகளுக்கு கொப்பளிக்கவும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை செய்தால் வாய்ப்புண் குணமாகும்.
2. அதிமதுரம்: அதிமதுரத்தில் வீக்க எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரிகள் எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால் வாய்ப்புண்களுக்கு எதிராக இது ஒரு பாரம்பரிய மருந்தாக இருப்பதோடு, இந்த அதிமதுரம் வாய்ப்புண்களால் ஏற்பட்ட எரிச்சலைப் போக்கி, குணமடையும் செயல்முறையை விரைவுப்படுத்துகிறது. ஒரு டீஸ்பூன் அளவு அதிமதுர பொடியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து, அதனை நேரடியாக வாய்ப்புண் மீது தடவி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு வாயை கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் மிகச் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்.
3. தேன் மற்றும் மஞ்சள்: தேனில் இருக்கும் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்புப் பண்பும், மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வீக்க எதிர்ப்புப் பண்பும் இணைந்து வாய்ப்புண்களுக்கு எதிராக ஒரு வலிமையான மருந்தாக செயல்படுகின்றன. ஒரு டீஸ்பூன் தேனை ஒரு சிட்டிகை மஞ்சள் தூளோடு கலந்து வாய் புண் மீது தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாயை கழுவ வாய்ப்புண் குணமாகும்.
4. கற்றாழை ஜெல்: கற்றாழையில் சருமத்தை ஆற்றும் பண்புகளோடு, வாய்ப்புண்களை குணப்படுத்தும் பண்புகளும் காணப்படுகிறது. இதில் உள்ள வீக்க எதிர்ப்புப் பண்புகள் உடனடி வாய்ப்புண்களில் இருந்து உடனடி நிவாரணத்தை அளித்து, குணமடையச் செய்கின்றன. ஃபிரஷ்ஷான கற்றாழை சாற்றை எடுத்து நேரடியாக வாய்ப்புண் மீது தடவ, வாய்ப்புண்கள் குணமடைகின்றன. இவ்வாறு 2 முதல் 3 முறை செய்து வர விரைவான முடிவுகளைப் பெற முடியும்.
5. கிராம்பு எண்ணெய்: கிராம்பு பல் வலிகளுக்கு மட்டுமல்ல, கிராம்பு எண்ணெய் வாய் புண்களால் ஏற்பட்ட வலியிலிருந்து தற்காலிக நிவாரணம் பெறுவதற்கும் உதவுகின்றன. தொற்றுகளை தடுப்பதற்கும் இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் செயல்படுவதால் வாய்ப்புண்கள் விரைவில் குணமடைகின்றன. இதற்கு ஒருசில துளிகள் கிராம்பு எண்ணெயை தேங்காய் எண்ணெயோடு கலந்து சுத்தமான விரலால் வாய்ப்புண் மீது தடவி சில நிமிடங்களுக்கு பிறகு வாயை கொப்பளிக்க வாய்ப்புண்ணிலிருந்து நிவாரணம் பெறலாம்.