
ப்ரோ பயாடிக் என்பது குடல் ஆரோக்கியத்தை சீராக வைக்கும் பொருளாகும். இது பலபிரச்னைகளை சரி செய்கிறது. Irritable bowel syndrome, வயிறு எரிச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவற்றை குணமாக்குகிறது. ப்ரோ பயாடிக் என்பது நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்தது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. நாம் பெரும்பாலும் ப்ரோ பயாடிக் நிறைந்த தயிரைக் தான் பயன்படுத்துகிறோம். அதிக ப்ரோ பயாடிக் நிறைந்த 5 பொருட்களைப் பற்றிப் பார்ப்போம்.
க்ரீக் யோக்ஹர்ட்
இது ஆடு, மாடுகளிலிருந்து பெறப்படுகிறது. குறிப்பாக புற்களை உணவாகக் கொள்ளும் ஆடு, மாடுகளின் பாலிலிருந்து ஆரோக்கியமான யோக்ஹர்ட் கிடைக்கும். இதைப் பற்றிய ஆராய்ச்சியில் குடல் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம், நீரிழிவு மற்றும் புற்று நோய் தடுப்பு இவற்றிற்கு க்ரீக் யோக்ஹர்ட் மிகச் சிறந்ததாக அறியப்படுகிறது.
கெஃபிர்
இது புளிக்கப்பட்ட பால் பொருளாகும். இதை சேமிக்கும் போது அதிக நல்ல பாக்டீரியாக்கள் வளர்வது இதன் தனிச் சிறப்பு.
நீரிழிவு நோயாளிகளுக்கு, குடல் ஆரோக்கியத்திற்கும், எடைக் குறைப்புக்கும், அழற்சியை போக்குவதற்கும் சிறந்ததாக அறியப்படுகிறது. லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதமாக உள்ளது. இது ஸ்மூத்தி செய்வதற்கும் பயன்படுகிறது.
கொம்புசா
இது ஒரு புளிக்கப்பட்ட தேயிலைப் பானமாகும். சீனா ஜப்பான் போன்ற இடங்களில் அதிகமாக விரும்பிக் குடிக்கக் கூடியது. இது இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் மிகச் சிறந்தது. இது கல்லீரலின் நச்சுக்களை நீக்குகிறது.
கிம்சி
புளிக்க பண்பட்ட காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் இதில் அதிக ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. கொரியாவின் பாரம்பரிய உணவான கிம்சி பூண்டு, மிளகு, இஞ்சி இவைகளுடன் சேர்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் ஊறுகாய்களில் பயன்படுத்தப்படுகிறது. செரிமானத்தை சீராக்கும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது.
மிசோ
இது ஜப்பானிய உணவாகும். சோயா பீன்ஸ், ப்ரௌன் அரிசி மற்றும் பார்லி இவைகளை புளிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. ரத்தச் சர்க்கரையை இது கட்டுப்படுத்துகிறது. புற்றுநோய் தடுப்பு, இதயம் மற்றும் குடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.
சார்க்ராட்
இது முட்டைகோஸில் இருந்து தயாரிக்கப்படும் புளித்த காய்கறி உணவாகும். இது இயற்கையான ஆரோக்கியம் அளிக்கக் கூடிய ப்ரோ பயாடிக் உணவாகும்.
டெம்பே
இது சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் புளித்த உணவாகும். கரையக் கூடிய நார்சத்துக்களைக் கொண்டது. இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது.
மேலே கூறப்பட்ட உணவுகள் அழற்சியைப் போக்கி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியது. மேலும் தோல் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக அறியப்படுகிறது.
மேலும் வாய் வழி ஆரோக்கியத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.