
மெட்டபாலிஸம் என்பது நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்றி உடலுக்குள் சேர்க்கும் செயலாகும். இரத்த ஓட்டம், சுவாசம், செல் சீரமைப்பு உடல் இயக்கங்கள் போன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் மெட்டபாலிஸம் பல வழிகளில் உடலுக்கு உதவி புரிகிறது.
மெட்டபாலிஸம் சிறப்பாக நடைபெறும்போது, ஊட்டச்சத்துக்களை உடல் நல்ல முறையில் உபயோகித்து நாள் முழுக்க உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கவும், உடல் எடையை சமநிலையில் பராமரிக்கவும் உதவ முடியும்.
மெட்டபாலிஸம் ஆரோக்கியமான முறையில் நடைபெறும்போது, ஹார்மோன் சுரப்பு சமநிலைப்படும். ஜீரணம் சிறப்பாக நடைபெறும். உடலிலுள்ள கழிவுகளும் நச்சுக்களும் நல்ல முறையில் வெளியேற்றப்படும்.
மெட்டபாலிஸ ரேட் அதிகரித்தால் உடலின் சக்தி அதிகரிக்கும். ஒபிஸிட்டி, நீரிழிவு போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் குறையும். இயற்கையான முறையில் உடலின் மெட்டபாலிஸ ரேட்டை அதிகரிக்க உதவும் 5 வகை உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
1.க்ரீன் டீ:
கொழுப்புகளை எரித்து மெட்டபாலிஸ ரேட் அதிகரிக்க உதவும் பானம் க்ரீன் டீ. இதிலுள்ள கேடெச்சின்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் காஃபின் ஆகியவை, உடலுக்கு தொடர்ந்து சக்தி அளிக்கக் கூடியவை. உடலின் நரம்பு மண்டல செயல்பாடுகள், உஷ்ணத்தை உற்பத்தி செய்யும் தெர்மோஜெனெஸிஸ் மற்றும் கொழுப்பு செல்களை உடையச் செய்யும் செயல் ஆகியவற்றை க்ரீன் டீ சிறந்த முறையில் ஊக்குவிக்கும். மேலும் எடைக் குறைப்பிற்கும் கலோரிகளை எரிக்கவும் உதவும்.
2.சிவப்பு மிளகாய்:
சிவப்பு மிளகாயில் உள்ள கேப்ஸைசின் என்ற கூட்டுப்பொருள் உடலில் தேவையான அளவு உஷ்ணத்தை உற்பத்தி செய்யவும், மெட்டபாலிஸ செயல்பாட்டின்போது கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் உதவி புரிகிறது.
3.முட்டை:
முட்டையில் புரதச் சத்து அதிகம். இது மெட்டபாலிஸத்திற்கு உதவக்கூடிய ஒரு சூப்பர் உணவு. முட்டை போன்ற புரோட்டீன் அதிகமுள்ள உணவை உட்கொள்ளும்போது அது உணவிலிருந்து கிடைக்கும் உஷ்ணத்தின் (Thermic Effect of Food) அளவை அதிகரிக்கச் செய்கிறது. அதனால் உணவு நல்லமுறையில் ஜீரணமாகி சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கு அதிகளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இது தவிர முட்டை மெல்லிய தசை திரளை (Lean Muscle Mass) கட்டமைக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது.
4.இஞ்சி:
ஜீரணத்தையும் மெட்டபாலிஸ ரேட்டையும் அதிகரிக்கச் செய்யும் குணம் கொண்டது இஞ்சி. இஞ்சியில் உள்ள ஜின்ஜரால் மற்றும் ஷோகால் போன்ற ஆக்ட்டிவ் கூட்டுப்பொருட்கள் உடலின் உஷ்ணத்தை அதிரிக்கச் செய்து அதிக கலோரிகள் எரிய உதவி புரிகின்றன. மெட்டபாலிஸம் சிறக்க இரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல் எடை சம நிலையில் இருப்பது அவசியம். இவை இரண்டிற்கும் இஞ்சி உதவி புரியும்.
5.முழு தானிய வகைகள்:
ஓட்ஸ், குயினோவா, முழு கோதுமை, மற்றும் பிரவுன் அரிசி போன்ற உணவுகளில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் உள்ளன. இவை ஜீரணமாக அதிக நேரம் பிடிக்கும். அப்போது உற்பதியாகும் உஷ்ணத்தின் அளவு அதிகரிக்கும். அதே நேரம் அதிக கலோரி எரிக்கப்படுவதால் மெட்டபாலிஸம் சிறக்கும். உணவு செரிமானமாக அதிக நேரமாவதால் இரத்தத்தில் சர்க்கரை மெதுவாக கலக்கும். உட்கொள்ளும் உணவின் அளவு குறையும்போது உடல் எடை அதிகரிப்பு தடுக்கப் படுகிறது.