
பண்டைய பாரதத்தை பொறுத்த வரையில் மருத்துவத் துறையில் பல சாதனைகளை செய்திருந்தது. பாரதத்தில் ஒவ்வொரு மாநிலமும் மருத்துவத்தில் முன்னேறி இருந்தன. ஒவ்வொரு மாநில மக்களும் தங்களுக்கு என்று தனித்தனியாக மருத்துவ முறையை கொண்டிருந்தனர். சித்த மருத்துவம், வர்மம், ஆயுர்வேதம், யோகம், அறுவை சிகிச்சை என்று பல பிரிவுகள் இருந்துள்ளது. அறுவை சிகிச்சை முறைகளில் கூட பெரும் முன்னேற்றம் பெற்றிருந்தது.
கிமு 1000 - 800 காலகட்டத்தில் பாரதத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை முறை நடைமுறையில் இருந்தது. அப்போதே அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும், மருந்துகளையும் சுஷ்ருதர் பயன்படுத்தி இருந்தார். பிற்காலத்தில் அந்நிய படைபெடுப்பில் நாட்டில் பாரம்பரிய வைத்திய முறைகள் அழிந்து போயின; அதுவும் பிரிட்டிஷ் காலத்தில், இந்திய பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டு மக்கள் பயமுறுத்தப்பட்டனர். விடுதலைக்கு பின்னரும் கோவிட் காலம் வரை இந்த பயமுறுத்தல் பரவியது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் சித்த வைத்தியம் பலனளித்தது. அப்போது இந்திய மருத்துவ துறையும் மிகச் சிறப்பாக செயல்பட்டது. மருத்துவத் துறையில் வளர்ந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை விட சிறப்பான முறையில் குடிமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இங்கு இழப்புகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. அந்த நேரத்தில் இந்தியா கோவிட் தொற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், போட்டியில் முன்னணியில் இருந்து, தடுப்பூசியையும் கண்டறிந்தது.
பல நூற்றாண்டு காலமாக இந்தியாவில் மருத்துவ கண்டுபிடிப்புகள் இல்லாமல், புதிதாக ஒரு தடுப்பூசியை கண்டறிந்தது உலகத்தை ஆச்சரியப்படுத்தியது. மருத்துவ துறையை பொறுத்தவரையில் இந்தியாவிற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதாரத் துறையை கையாளுகிறது, இதன் மதிப்பு 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் 27 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்து பொருட்களை இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்தியா ஏற்றுமதியை பொறுத்த வரையில் தரவரிசையில் 10 வது இடத்திலும், சில நேரம் அதற்கு அடுத்த வரிசையிலும் பின் தங்குகிறது. ஆனால், உலகளவில் அதிக மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது.
இந்தியா என்னதான் அதிக மருந்துகளை உற்பத்தி செய்தாலும், ஏற்றுமதியில் முதல் 3 இடங்களில் வந்தாலும் கூட அதன் லாபத்தில் பெரும் பங்கு, மருந்தின் காப்புரிமை நிறுவனங்களுக்கு போய் விடுகிறது.
பல ஆயிரம் கோடிகளை செலவழித்து இந்திய நிறுவனங்கள் மருந்துகளை உற்பத்தி செய்தாலும் அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பணத்தை வாங்கி விடுகின்றன. இதனால், இந்தியாவில் மருந்துகளின் விலை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் இலவச மருத்துவம் வழங்கினாலும் கூட, மருந்து உபகரணங்களை பெரிய அளவில் செலவழித்துதான் வாங்குகின்றனர். ஒரு சில ஊசிகளை அரசாங்கம் ₹20,000 முதல் பல லட்சங்கள் வரை செலவு செய்துதான் சந்தையில் வாங்கி மக்களுக்கு தருகிறது.
இந்திய மருத்துவப் பொருளாதாரம் அந்நியர்களால் உறிஞ்சப்படாமல் இருக்க, புதிதாக பல மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். சுயமாக காப்புரிமை பெறும் வகையில் கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்த வேண்டும். பல மருந்துகள் சுயமாக கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு கிடைக்கும் வருவாய் முழுமையாக நாட்டிற்கே கிடைக்கும். இதனால் மருந்துப் பொருட்களின் விலையும் பெருமளவு குறையும், அரசின் பொருளாதார சுமையும் குறையும்.