நமது மூளைதான் நம் உடலின் கட்டுப்பாட்டு மையமாகும். அது நம் எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் என அனைத்தையும் நிர்வகிக்கிறது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இந்தப் பதிவில் நமது மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்த சில உணவுகளைப் பற்றி பார்ப்போம்.
மூளைக்கு சிறந்த உணவுகள்:
டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இது மூளை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒரு வகை ஆக்சிஜனேற்றி ஆகும். இது நமது மூளை செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவி, ஞாபக சக்தி மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது.
பெர்ரி பழங்கள்: ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரமாகும். ஆக்சிஜனேற்றிகள் மூளை செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. மற்றும் வயது தொடர்பான மனநோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.
நட்ஸ் மற்றும் விதைகள்: வால்நட், பாதாம், சியா விதைகள், ஆளி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகள் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் விட்டமின்களின் சிறந்த ஆதாரமாகும். இவை மூளை செல்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம்.
முழு தானியங்கள்: முழு தானியங்களில் நார்ச்சத்து விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருந்து மூளைக்குத் தேவையான நிலையான ஆற்றலை வழங்க உதவும்.
பச்சை இலைக் காய்கறிகள்: கீரைகள், பாலக்கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் அதிக அளவில் உள்ளன. இவை மூளை செல்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம்.
கொழுப்பு மீன்கள்: சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற கொழுப்பு மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமது மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும். இதனால் நமது அறிவாற்றல் செயல்பாடு மேம்படுகிறது.
ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மட்டுமின்றி போதுமான தூக்கம், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது போன்றவற்றை கடைபிடிப்பது மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, மேற்குரிய உணவுகளை உட்கொண்டு, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால், மூளையை என்றும் சுறுசுறுப்புடன் வைத்திருக்க முடியும்.