பெற்றோர்களாகிய நாம், ஒவ்வொரு நாளுமே நம் குழந்தைகளுக்கு அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு சிறக்கவே விரும்புகிறோம். சில நேரங்களில் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவாக இருக்கும்பட்சத்தில் அது ஆரோக்கியமான உணவாக இருப்பதில்லை. இது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாக அமைகிறது. அந்த வகையில் குழந்தைகளின் ஆரோக்கியம் பேண, தவிர்க்கப்பட வேண்டிய அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஆறு உணவுப் பொருட்களை இந்தப் பதிவில் காண்போம்.
சர்க்கரை கூட்டப்பட்ட தானியங்கள்: கடைகளில் குழந்தைகளுக்காக விற்பனை செய்யப்படும் பல காலை தானிய உணவுகளில் சர்க்கரை அதிகமாகவும், ஊட்டச்சத்து குறைவாகவும் உள்ளது. இந்த தானியங்கள் உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும், இதனால் குழந்தைகளுக்கு அதிகளவிலான சோர்வும் பசியும் ஏற்படலாம். எனவே, இதனை கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்ப்பது நல்லது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: குழந்தைகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி உண்பதால் ஆஸ்துமா போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், இதன் சேர்க்கைகள் உடலில் குடல் நுண்ணுயிரிகளை சீர்குலைத்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். எனவே, குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொடுப்பதை குறைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.
பழச்சாறு: பழச்சாறுகள் குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான உணவுத் தேர்வாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் அதில் சர்க்கரை அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும். மேலும், பழச்சாறு அதிகமாகக் குடிப்பதால் உடல் எடை அதிகரிப்பு, பல் சிதைவு மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். எனவே, இதற்கு பதிலாக, குழந்தைகளை முழு பழங்களை சாப்பிடவும், தண்ணீர் அல்லது பால் அதிகமாகக் குடிக்கவும் ஊக்குவிப்பது நல்லது.
பொரித்த உணவுகள்: ஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிக்கன் நகெட்ஸ், மொஸரெல்லா ஸ்டிக்ஸ், சிப்ஸ் போன்ற பொரித்த உணவுகளில் ஏராளமான ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் நிறைந்திருக்கின்றன. இது உடலின் எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, அதற்கு பதிலாக, வேகவைத்த உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது.
மிட்டாய், ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகள்: பொதுவாகவே, குழந்தைகள் மிட்டாய், ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்புகளை அதிகமாக விரும்பி சாப்பிடுவர். இதுபோன்ற உணவுப் பொருட்களில் சர்க்கரை அதிகமாகவும், ஊட்டச்சத்து குறைவாகவும் இருக்கும். மேலும் இவை, பல் சிதைவு, எடை அதிகரிப்பு போன்ற உடல் நல பாதிப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். எனவே, இதற்கு பதிலாக, பழம் அல்லது தேன் போன்ற இயற்கை இனிப்புகளை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
பிஸ்கட்ஸ்: குழந்தைகள் பிஸ்கட் சாப்பிடுவதால் ஊட்டச்சத்து குறைபாடு, செரிமான பிரச்னைகள், கொழுப்புகள், சர்க்கரை தொடர்பான உடல்நலப் பிரச்னைகள், ஒவ்வாமை, எதிர்வினைகள் பாதிப்புகள் அவர்களின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும்.