உடலை சமநிலையாக வைப்பதற்கு உதவுவது பாதங்கள்தான். நிற்பதற்கும், நடப்பதற்கும் உதவுவதும் நமது பாதங்களே. இவையே நமது உடலின் மொத்த எடையையும் தாங்கக் கூடியதாகும். பொதுவாக நாம், ‘பாதங்கள் வலிக்கிறது’ என்கிறோம். பாதம் என்பது குதிகால், கணுக்கால், கால் விரல்களுக்கு இடையே உள்ள எலும்புகள் பாதிக்கப்படுவதால் இந்த வலி உண்டாகலாம். ஆண்களை விட பெண்களுக்குத்தான் பாத வலி அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சிலருக்கு பாதங்கள் எப்போதும் வலித்துக்கொண்டே இருக்கும். மசாஜ் செய்தாலும், காலணிகளை மாற்றிப் பார்த்தாலும் பாத வலி குறையாது. இதற்கு முக்கியக் காரணம் அதிக வேலை பளுவால் ஏற்படும் பாத வலியாக இருக்கலாம். ஏதேனும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிகமாக நடந்தோ, வேலை செய்தோ இருந்தால் பாதத்தில் வலி ஏற்படலாம். இதற்கு வெந்நீரில் சிறிதளவு எப்சம் உப்பு சேர்த்து கால்களை வைத்திருப்பது நல்ல பலனைத் தரும்.
கால்களுக்கு, குறிப்பாக பாதங்களுக்கு ஆயில் மசாஜ் செய்வது வலியைக் குறைக்கும். இப்படி எந்தவிதமான அதிகப்படியான வேலையோ, அதிகப்படியான நடையோ இல்லாமல் இருப்பினும் பாத வலி இருந்தால் எடை அதிகரித்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அதிக எடை இருப்பின் நமது பாத தசைகளுக்கு அழுத்தம் அதிகரித்து அதனால் வலி உண்டாகும். இதற்கு உடல் எடையைக் குறைப்பதுதான் சரியான தீர்வாகும்.
அதேபோல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாத நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் நாளடைவில் பாதிப்படையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, இரத்த சர்க்கரையின் அளவை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அத்துடன் தகுந்த மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று மருந்துகளை உட்கொள்ளுவதன் மூலம் பாத வலியை சரி செய்யலாம்.
பாத வலிக்கான தீர்வுகள்:
1. பாத வலிக்கு தினமும் 20 நிமிடங்கள் நடப்பது, குறிப்பாக மணலில் நடப்பது நல்ல தீர்வைத் தரும். செருப்பு போடாமல் பாதங்களை நன்கு மணலில் புதைத்து நடப்பது நல்லது. முடிந்தால் பீச் மணலில் 20 நிமிடங்கள் நடக்கலாம்.
2. பாத விரல்களைக் கொண்டு சிறு சிறு வேலைகள் செய்வது, பாத விரல்களை மடக்கி நீட்டுவது, பாத தசைகளை வலுப்படுத்தும்படியான பயிற்சிகளை செய்வது வலியைக் குறைக்கும்.
3. உரிய காலணிகளை அணிந்தால் பாதங்களின் வலி குறையும்.
4. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாதங்களின் நடுவில் வலி உண்டாவதுடன், பாத எரிச்சலும் உண்டாகும். இதற்கு ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பது, வலியிலிருந்து நிவாரணம் கொடுக்கும்.
5. அத்துடன் பாதங்களில் வலி இருக்கும்போது நிறைய நடக்காமல் ஓரளவு ஓய்வு கொடுப்பது வலியை வெகுவாகக் குறைக்கும்.
6. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் ஆப்பிள் சீடர், தேன் சிறிது கலந்து குடிப்பது பாத வலிக்கு சிறந்த நிவாரணமாக அமையும்.
7. பாத வலி உள்ளவர்கள் குளிர்காலத்தில் வெறும் காலுடன் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். கால்களில் சாக்ஸ் அணிந்து நடந்தால் பாதமும் நரம்புகளும் பாதிக்காமல் இருக்கும்.
பாதங்களில் வலி தொடர்ந்து இருந்தால் சர்க்கரை நோயாகவோ அல்லது கீல்வாதம் இருந்தாலோ உண்டாகலாம். இதற்குத் தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகள் எடுத்துக்கொள்வது நல்லது.