பொதுவாக, அனைத்து காய்கறிகளுமே உடலுக்கு வைட்டமின்ஸ், மினரல்ஸ் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களைத் தரக்கூடியவையே. இருந்தபோதும் அவற்றில் ஒருசில காய்கறிகள், மற்றவற்றை விட அதிகளவு ஊட்டச்சத்துக்கள் தருபவையாக இருக்கின்றன. அவற்றுள் அதிசயிக்கத்தக்க வகையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, 'க்ரீன் ஹெல்த் வெஜிடபிள்ஸ்' என அழைக்கப்படும் ஆறு காய்கறிகள் எவை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. புரோக்கோலி: 91 கிராம் புரோக்கோலியில் நம் உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் Kயின் 77 சதவிகிதமும், ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் Cயின் 90 சதவிகிதமும், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும், இதய நோயை வரவழைக்கக்கூடிய வீக்கங்களைக் குறைக்கவும் புரோக்கோலி உதவும் என 'மெடிக்கல் நியூஸ் டுடே' கூறுகிறது.
2. காலிஃபிளவர்: 155 கிராம் லைட்டா வேகவைத்த காலிஃபிளவரில் 3 கிராம் நார்ச்சத்து, 3 கிராம் புரோட்டீன் மேலும் உடலுக்குத் தேவையான வைட்டமின் K, C, ஃபொலேட் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளதாக யு. எஸ். அக்ரிகல்ச்சர் டிபார்ட்மென்ட் கூறியுள்ளது.
3. பச்சைப் பட்டாணி (Green Peas): பச்சைப் பட்டாணியில் ஸ்டார்ச் அதிகளவு உள்ளது. 160 கிராம் பச்சைப் பட்டாணியில் 9 கிராம் நார்ச்சத்து, 9 கிராம் புரோட்டீன், வைட்டமின் A, C, K ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. பச்சைப் பட்டாணி சிறப்பான செரிமானத்துக்கு உதவக்கூடியது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது இரத்த சர்க்கரை அளவு உயரக்கூடிய வாய்ப்புள்ளது.
4. பூண்டு: பூண்டில் செலீனியம், நார்ச்சத்து, வைட்டமின் B6 ஆகிய சத்துக்கள் அதிகளவு உள்ளன. பூண்டின் முதன்மையான செயல் (primary active) திறன் கொண்ட அல்லிஸின் என்ற கூட்டுப்பொருள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கவும் உதவி புரியும்.
5. பசலைக் கீரை: உச்சபட்ச ஊட்டச்சத்துக்கள் அளிக்கக் கூடிய ஒருசில காய்கறிகளில் பசலைக் கீரையும் ஒன்று. இது குறைந்த அளவு கலோரி கொண்டது. ஒரு கப் அல்லது 30 கிராம் பச்சை பசலைக் கீரையில் ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான வைட்டமின் A யின் 16 சதவிகிதமும், வைட்டமின் Kயின் 120 சதவிகிதமும் அடங்கியுள்ளன. இதிலுள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலை நோய்த் தாக்குதலிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
6. கேரட்: பசலைக் கீரைக்கு அடுத்தபடியாக ஆரோக்கியம் தருவதில் முன்னணியில் நிற்பது கேரட். 130 கிராம் கேரட்டில் ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான வைட்டமின் Aயின் அளவில் 119 சதவிகிதம் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் C, பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டீன் போன்ற சத்துக்களும் கேரட்டில் அதிகம். ஒரு வாரத்தில் சுமார் 4 கேரட் சாப்பிடுவதன் மூலம் கோலாரெக்டல் (Colorectal) கேன்சர் வரும் அபாயத்தைக் குறைக்க முடியும்.
மேற்கூறிய இந்த ஆறு வகை காய்கறிகளை அடிக்கடி உட்கொண்டு நோயின்றி வாழ்வோம்.