
முதுமையைக் கண்டு அச்சமா? 5 மணிக்குமேல் இந்த 6 பழக்கங்களைப் பின்பற்றுங்க.. முதுமையை ஆனந்தமாய் வரவேற்கலாம்.
முதுமை என்பது அனைவருக்கும் பொதுவானது. 'வயதாகிக்கொண்டே போகுதே' என்று வருத்தப்படாமல், முதுமையை முக மலர்ச்சியுடன் வரவேற்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கையின் எல்லாப் பகுதியுமே இனிக்கும். அதற்கு நாம் மாலை 5 மணிக்கு மேல் பின்பற்ற வேண்டிய 6 பழக்கங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. படுக்கச் செல்லும் முன் ஒரு கப் டீ அல்லது காபி அருந்த நினைப்பது சகஜம். ஆனால் காஃபின் கலந்த பானம் தூக்கத்தை கெடுக்கும் என்பதால் காஃபினேட்டட் பானங்கள் அருந்துவதை மாலை 5 மணிக்கு முன் முடித்துக்கொள்வது நலம். 5 மணிக்குப் பிறகு விரும்பும்போது மூலிகை டீயான கெமோமைல் (Chamomile) டீ அருந்தலாம். கெமோமைல் டீ தசைகளை தளர்வுறச் செய்து ஆழ்ந்த அமைதியான தூக்கம் பெற உதவும்.
2. இரவு டின்னரை முடித்துவிட்டு, தூங்கச் செல்லும் முன் சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்ளுவது உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும். நடைப்பயிற்சி செரிமானம் சிறப்பாக நடைபெற உதவி புரியும். முதுமையில் முழு ஆரோக்கியம் பெற கோளாறில்லாத செரிமானம் அவசியம். டின்னருக்குப் பின் நடைப்பயிற்சி செய்வது, குடலின் இயக்கங்களை சீராக்கி உட்கொண்ட உணவை உடைக்கவும் ஊட்டச்சத்துக்களின் அளவை முழுமையாக வெளிக் கொணரவும் உதவி புரியும். தினசரி சாயந்தர நேரத்தில் சிறிய நடைப்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்க உதவும்.
3. உடல் முழு ஆரோக்கியம் பெற மன ஆரோக்கியம் மிக முக்கியம். ஸ்ட்ரெஸ் இல்லாமலிருக்க டைரி எழுதுவது, மூச்சுப் பயிற்சி, யோகா மற்றும் மெடிட்டேஷன் செய்வது அல்லது மனதுக்குப் பிடித்தவர்களுடன் உரையாடுவது போன்றவற்றில் ஏதாவது ஒன்றை செய்து வரலாம்.
ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழப் பழகிவிட்டால் நமது உணர்ச்சிகளை வெல்வதும் உடல் ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொள்வதும் சுலபமாகிவிடும். சோஷியல் மீடியாக்குள் உலா வருவதை நிறுத்தி மெல்லிய வெளிச்சத்தில் மனதுக்குப் பிடித்த பாடலை கேட்டபடி படுக்கச் செல்வது தொந்தரவில்லாத தொடர் தூக்கம் பெற உதவும்.
4. உடலை நீரேற்றத்துடன் வைக்க பகல் நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள். படுக்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்க. இதனால் தூக்கத்தின் இடையில் ரெஸ்ட் ரூம் போக வேண்டுமென்ற அழுத்தம் ஏற்படாது.
5. ஆல்கஹால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிர்மறை விளைவுகளையே உண்டு பண்ணும். அமைதியான தூக்கத்திற்கு பங்கம் விளைவிப்பது முதல் நாள்பட்ட வியாதிகளாகிய கேன்சர் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளையும் அதிகரிக்கச் செய்யும். எனவே இப் பழக்கத்தை 5 மணிக்குப் பிறகு முழுமையாக கை விடுவது நலம்.
6. 5 மணிக்குப் பின் ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் போலிருந்தால் யோகர்ட் போன்ற ப்ரோட்டீன், கார்போஹைட்ரேட், ஆரோக்கியமான கொழுப்பு சேர்ந்த உணவை உண்ணலாம். 5 மணிக்குப் பிறகு சரிவிகித ஸ்னாக்ஸ் சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும். இரவு தூக்கம் கெடாது. குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது உதவும்.
உங்க டின்னரில் ப்ரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் இருக்குமாயின் ஸ்னாக்ஸ் கூட தேவைப்படாது. டின்னெரே தொடர்ந்து சக்தி தர உதவி புரியும். நீண்ட நேரம் பசி உணர்வும் ஏற்படாது. பழங்கள், காய்கறிகள், பருப்பு மற்றும் முழு தானிய வகைகளிலான உணவுகள், அதிகமாக உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் குளுகோஸ் அளவை குறைக்கவும், இதய நோய் உண்டாகும் அபாயத்தை தடுக்கவும் உதவும்.
தரமான தூக்கம் உடலின் வீக்கங்களைக் குறைத்து, நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தை தடுக்கும். நல்ல செரிமானம் எடை குறைப்பிற்கும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உதவும். இவற்றுடன் ஆல்கஹாலை தவிர்ப்பது சிறந்த ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்.