மன அழுத்தமா? விடுபட நல்வழிகளை நாடுங்கள். இந்த 6 உதவும்.

Stress
Stress

மன அழுத்தத்தில் சிக்கி, உங்கள் நிம்மதியை கெடுத்துக் கொள்ளும் நபராக இருந்தால், இந்தப் பதிவு நிச்சயமாக உங்களுக்கு உதவும். மன அழுத்தத்தை எதிர்கொள்வதற்கும், அதிலிருந்து விடுபடுவதற்கும் அற்புதமான 6 குறிப்புகள் இதோ உங்களுக்காக மட்டும்!

அதிவேகமாய் ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், இளவயதினர் பலர் வெகு விரைவிலேயே மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். நீடித்த வேலைப் பளு, கை மீறிய பொருளாதாரச் செலவுகள், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றம் மற்றும் சில காரணங்களால் மன அழுத்தம் உண்டாகிறது. இப்படியான சூழலில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி யாரிடம் பேசினாலும் கோபமாகத் தான் பேசுகின்றனர். இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன என்று சற்று தனிமையில் அமர்ந்து சிந்தித்தால் மிக எளிதாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். ஆம், எதைப் பற்றியும் சிந்திக்காமல் சிறிது நேரம் தனிமையை சொந்தமாக்கினால், நாம் செய்யும் தவறுகளை உணர முடியும். மன அழுத்தத்தில் இருக்கும் போது மற்றவரிடம் கோபமாக பேசுவதைப் கூட நிறுத்திக் கொள்ள முடியும். இதிலிருந்து விடுபட பின்வரும் குறிப்புகளை பயன்படுத்துங்கள்.

1. இயற்கையுடன் நேரத்தை செலவிடுங்கள்:

இன்றைய காலகட்டத்தில் இயற்கையின் அழகை ரசித்துப் பார்க்க பலரும் நேரம் ஒதுக்குவதில்லை. இயற்கையை விரும்பத் தொடங்கினால், அதிலிருக்கும் ஆனந்தத்தை உணர முடியும். உதாரணத்திற்கு ஒரு பயணத்தின் போது ஜன்னல் வழியே ஏராளமான காட்சிகள் கண்ணில் படும். அதில் இயற்கையின் அழகைப் பரிசளிக்கும் ஒருசில காட்சிகளை நம்மையும் மீறி ரசிப்போம் அல்லவா! அந்த கணங்களில் ஏதோ ஒரு புத்துணர்ச்சி நமக்கு கிடைக்கும். அதுவே இன்னும் அதிகமாக நேரத்தை ஒதுக்கி இயற்கையை நாம் ரசிக்கத் தொடங்கினால் மனம் புத்துணர்ச்சி அடையும்.

2. போதுமான ஓய்வு அவசியம்:

அதிக நேரம் வேலை செய்வதால் சிலருக்கு போதுமான தூக்கம் கிடைப்பதில்லை. இந்த நிலை தொடரும் பட்சத்தில் மன அழுத்தம் தானாகவே வந்து விடும். ஆகையால் என்ன தான் அதிகமான வேலை இருப்பினும், தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்திற்கு நன்றாக தூங்கி ஓய்வெடுத்தால், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சியாக இருக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தம் ஏன் ஏற்படணும்!
Stress

3. தியானம்:

தினசரி தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கென சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். இது மனதளவிலும், உடலளவிலும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

4. அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்:

சில நிகழ்வுகள் உங்களை மகிழ்விக்கும். சில நிகழ்வுகள் உங்களுக்குத் துன்பம் தரலாம். இம்மாதிரியான நேரங்களில் நடந்தவற்றை ஏற்றுக்கொண்டு உங்களை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டால் மன அழுத்தம் என்பதே இல்லாமல் போகும்.

5. இலக்குகளைத் தீர்மானியுங்கள்:

உங்களின் எதார்த்தமான இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளை தீர்மானித்துக் கொள்ளுங்கள். இலக்கை அடைய கிடைக்கும் சந்தர்ப்பங்களை நல்வழியில் பயன்படுத்துங்கள். இலக்குகளை நோக்கிப் பயணிக்கையில் உங்கள் மனநலன் முன்னேறும்.

6. நேசிப்பவருடன் நேரத்தை செலவிடுங்கள்:

நீங்கள் யாரை அதிகமாக நேசிக்கிறீர்களோ அவர்களுடன் நேரத்தை செலவிடுவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, மனதிற்கும் இதமாக இருக்கும். இதனால் வெகு விரைவிலேயே மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com