பெண்ணாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தான் ஐம்பது வயதை எட்டும் காலக்கட்டத்தில் சந்திக்க நேரும் ஓர் அசௌகரியமான நிலைதான் மெனோபாஸ். அந்த நேரங்களில் உண்டாகும் அதிகளவு உதிரப்போக்கின் காரணமாக உடல் பலவீனமடையும்; எலும்புகள் ஆரோக்கியமின்றி முறிவடையும் நிலையும் உண்டாகும். உடல் மற்றும் மன வலிமையோடு இவற்றையெல்லாம் எதிர்கொள்ள நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தேவைப்படும் 6 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
எலும்புகளின் ஆரோக்கியம் காக்க உதவும் கால்சியம் சத்து காலே, பசலை போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் அதிகம் உள்ளது. இவற்றை தினசரி உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.
ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி போன்ற பெரி வகைப் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் உண்டாகும் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி உடலின் வீக்கங்களைக் குறைக்க உதவி புரிகின்றன.
பாதாம், வால்நட், பிளாக்ஸ் மற்றும் சியா விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் மிக அதிகம் உள்ளன. மக்னீசியம் சத்தும் இவற்றில் உள்ளது. இவை அனைத்தும் நல்ல மனநிலையை உருவாக்கவும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவக் கூடியவை.
ஓட் மீல், குயினோவா மற்றும் பிரவுன் ரைஸ் ஆகியவற்றில் உள்ள அதிகளவு நார்ச்சத்தானது சிறப்பான செரிமானத்துக்கு உதவி புரிவதுடன் உடல் எடையை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவுகிறது. உடலுக்குத் தேவையான சக்தியையும் ஆரோக்கியமான மனநிலையையும் தரக்கூடிய B வைட்டமின்களும் இந்த தானியங்களில் உள்ளன.
எலும்புகளை வலுவானதாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கக்கூடிய கால்சியம் மற்றும் வைட்டமின் D சத்துக்கள் யோகர்ட், சீஸ் மற்றும் பால் போன்ற டெய்ரி (Dairy) வகை உணவுகளில் அதிகம் உள்ளன.
முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர், பிரஸ்ஸல் ஸ்ப்ரௌட் போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்களில் உள்ள ஒரு வகைக் கூட்டுப் பொருளானது ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் அளவை சம நிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகிறது. இந்தக் காய்கறிகளை அடிக்கடி உட்கொள்வதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது.
மெனோபாஸ் காலத்தில் உள்ள பெண்கள் மட்டுமின்றி, அனைத்துப் பெண்களுமே மேலே கூறிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு எப்பவும் ஆரோக்கியத்துடன் வாழலாமே!