வீட்டிலும் அலுவலகத்திலும் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது பலவித உடல் நலப் பிரச்னைகளுக்கு வழிவகுப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் சேதப்படுத்துகிறது. அந்த வகையில் ஒரு நபர் உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் வரக்கூடிய 6 வகை உடல் பிரச்னைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. நோயெதிர்ப்பு மண்டலத்தின் பலவீனம்: உட்கார்ந்து வேலை பார்ப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து பல நோய்களை ஏற்படுத்தி கடும் விளைவுகளை உண்டாக்குகிறது. இது தொற்று நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதோடு, நாள்பட்ட மன அழுத்தம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும்.
2. தூக்கக் கோளாறுகள்: நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது தூக்கப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். தூக்கமின்மை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதோடு, பகல் நேர சோர்வுடன் தூக்கம் தொடர்பான பல பிரச்னைகள் தொடர்ந்தால், நீங்கள் மனதளவில் சோர்வடைவீர்கள்.
3. இருதய நோய்கள்: நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது இதயம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுப்பதோடு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். அதோடு, மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.
4. மூட்டு பிரச்னைகள்: ஒரே இடத்தில் அசையாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது தசைகள் மற்றும் மூட்டுகளில் பிரச்னைகளை ஏற்படுத்தி முதுகு வலி, கழுத்து வலி போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.
5. செரிமான பிரச்னைகள்: பல மணி நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால், அது எரிச்சல் நோய்க்குறி, புண்கள், அமில ரிஃப்ளக்ஸ் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுப்பதோடு, மன அழுத்தமும், உடல் உழைப்பும் இல்லாத காரணத்தால் சரியாக சாப்பிட முடியாது. எனவே, செரிமான பிரச்னைகள் அதிகரிக்கின்றன.
6. மனநிலை மாற்றங்கள்: நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது மனநிலையில் மோசமான விளைவை ஏற்படுத்தி, மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றை அதிகரிப்பதோடு, தொடர்ந்து வேலை செய்வது சோர்வு மற்றும் எரிச்சலை உண்டாக்கி இயல்பு வாழ்க்கையை பாதித்து விடுகிறது.
தொடர்ந்து உட்கார்ந்து வேலை பார்ப்பதற்கு பதில் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஐந்து நிமிடங்கள் தங்களது உடலை தளர்வாக்கி வேலை செய்வது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.