
லட்சக்கணக்கான மக்கள் தங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது, என்பதை அறியாமல் அதை அதிகரிக்கும் வேலையை செய்கின்றனர். பலரும் அதிகமாக சிறுநீர் வெளியேறுதல், அதீத தாகம், சோர்வாக உணர்வது, லேசான தலைசுற்றல் ஆகியவற்றையே நீரிழிவு நோயின் அறிகுறிகளாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த அறிகுறிகள் மட்டும் அல்லாமல் வேறு சில அறிகுறிகளும் சர்க்கரை நோயை உணர்த்துகின்றன. ஆனால், நாம் அதை அறிவதில்லை. அதுபோன்ற சில அசாதாரண அறிகுறிகளை பற்றி இங்கு காண்போம்.
1. பார்வை திறன் குறைதல்
உடலில் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்து பின்னர் குறையும் போது, அது கண்களில் உள்ள திரவத்தின் அளவை உடனடியாக மாற்றுகிறது. இது பார்வை லென்ஸை உடனடியாக பாதிக்கிறது. இதனால் நீரழிவு நோயாளிகளின் பார்வை சில நேரங்களில் திடீரென மங்கலாகி விடும். பின்னர் , சர்க்கரை அளவு சமநிலைக்கு வந்தவுடன் மீண்டும் பார்வை தெளிவாகிறது.
இவ்வாறு அடிக்கடி பார்வை திறனில் உள்ள ஏற்ற இறக்கங்கள் சிறிது சிறிதாக முழு பார்வையும் பாதிக்கக்கூடும். சர்க்கரை நோய் விழித்திரையில் உள்ள சிறிய இரத்த நாளங்களை சேதப்படுத்தும், ஆரம்ப காலத்தில் இதை கவனிக்காவிட்டால் பின்னாளில் பெரிய கண் பாதிப்பை ஏற்படுத்தும்.
2. பூஞ்சை தொற்று
இரத்தத்தில் ஏற்படும் சர்க்கரை உயர்வு , ஈஸ்ட் மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சிக்கு ஆதரவான சூழல்களை உருவாக்குகிறது. இதனால், நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி பூஞ்சை தொற்றுக்கு ஆளாகின்றனர். பெரும்பாலும் உடலில் அதிக ஈரப்பதம் மிக்க இடங்களில் பூஞ்சை தொற்றுகள் தாக்குகின்றன. இவை இடுப்பு, கழுத்தின் பின்புறம், தொடைகள், மற்றும் உடலிடுக்குகளில் தோன்றுகின்றன. ஆண்கள் மற்றும் பெண்களின் தனிப்பட்ட பகுதிகளிலும் பூஞ்சை தொற்று படர்கிறது. போதுமான சிகிச்சைகள் மேற்கொண்ட போதிலும் தொற்றுகள் மீண்டும் வந்தால், அது உங்கள் இரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாக உள்ளதன் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
3. அரிப்பு
உடலில் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாக இருக்கும் போது, அது நரம்புகளை சேதப்படுத்தி ரத்த ஓட்டத்தினை குறைக்கிறது. இதனால் சருமம் விரைவில் வறண்டு போய், பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அடிக்கடி அரிப்பினை ஏற்படுத்தும். பொதுவாக கை மற்றும் கால்களில் இந்த அரிப்பு அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். மேலும் சர்க்கரையினால் ஏற்படும் பூஞ்சை தொற்று தாக்குதலினாலும் அரிப்பு ஏற்படும். இதுவும் சர்க்கரை நோயின் ஒரு அறிகுறியாக எச்சரிக்கையுடன் இருக்கலாம்.
4. சுவாசத்தில் பழ மணம்
உடலில் உள்ள சர்க்கரையை பயன்படுத்த முடியாத பொழுது அது கொழுப்பினை உடைக்கிறது. இந்த செயல்முறையை கீட்டோன் செய்கிறது. பொதுவாக சுவாசத்தில் பழ மணம், ஒரு விசித்திரமான புளித்த இனிப்பு வாசனையோ அல்லது நெயில் பாலிஷ் ரிமூவரின் வாசனையோ வீசினால், அது சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறி என்பதை விட அபாய அறிகுறி என்று கவனத்துடன் இருக்கலாம். இது நீரிழிவு கீட்டோஅசிடோசிஸ் (DKA) இன் அறிகுறியாக இருக்கிறது. இது உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசர நிலையாகும்.
5. மூட்டுவலி மற்றும் கூச்சம்
நீரிழிவு நோய் நரம்புகளை சேதப்படுத்தி, கை கால்களில் கூர்மையான, எரிச்சல் மிகுந்த கூச்ச உணர்வை ஏற்படுத்தும். இது சில்லென்ற கூச்சம் மற்றும் ஊசியால் குத்துவதை போன்ற உணர்வினை ஏற்படுத்தும், சில நேரம் கால்களில் பலவீனத்தையும் உண்டாக்கும். உடலில் சர்க்கரை உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் இந்த அறிகுறி அடிக்கடி சிலருக்கு ஏற்படக்கூடும்.
6. மனநிலை மாற்றங்கள்
இரத்த குளுக்கோஸ் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மூளையின் வேதியியலை சீர்குலைத்து விடுகிறது. இதனால் எரிச்சல், பதட்டம் அல்லது மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது. அடிக்கடி மூளையின் ரசாயன சமநிலை மாறும் போது, கோபமும் எரிச்சலும் அடிக்கடி ஏற்படும். இது மனநிலையில் அவ்வப்போது கடுப்பான மாற்றத்தை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோய் எப்போதும் பழைய அறிகுறிகளுடன் மட்டும் வருவதில்லை. மேலும் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால், அதிக தகவலுக்கு மருத்துவரை அணுகவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)