பால் பொருட்களில் தயிர் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். தயிரில் லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளதோடு, புரோபயாடிக்குகள், புரோட்டீன்கள், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்து மிக்க உணவும் கூட. இத்தகைய தயிரை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. இதய ஆரோக்கியம்: தயிரில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் ஆகியவை இதய ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, இருதய நோய் அபாயத்தை குறைக்கிறது. தயிர் சாப்பிடுவதால் இதயம் சார்ந்த பிரச்னைகள் பெருமளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. எலும்புகள் மற்றும் பற்கள்: தயிரில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் இருப்பதால் எலும்பு அடர்த்தி மற்றும் பல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைப்பதிலும், ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதிலும் முக்கியப் பங்காற்றுவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவிக்கிறது.
3. எடை இழப்பு: ஜர்னல் ஆஃப் ஒபிசிட்டி இதழ்களில் வெளியிடப்பட்ட ஆய்வுகளில் பசியைக் கட்டுப்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை மேலாண்மைக்கு தயிர் உதவுவதாகத் தெரிவித்துள்ளதோடு, இதில் இருக்கும் உயர் புரதம், பசியை குறைத்து அதிகமாக சாப்பிடுவதை தடுப்பதால் இதன் மூலம் எடை வெகுவாகக் குறைகிறது.
4. செரிமான மேம்பாடு: தயிரில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளதால், நுண்ணுயிர் செரிமானம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல் மற்றும் இரைப்பை குடல் பிரச்னைகளைத் தடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதோடு,. தயிரை வழக்கமாக உட்கொள்வது குடல் பாக்டீரியாவை சமப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கம், மலச்சிக்கல் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) போன்ற பிரச்னைகளைப் போக்கவும் உதவும்.
5. நோய் எதிர்ப்பு சக்தி: WHO அறிக்கைப்படி, தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு, நன்மை பயக்கும் பாக்டீரியா ஆன்டிபாடிகளின் உற்பத்தியைத் தூண்டி நோயெதிர்ப்பு செல்களை செயல்படுத்துகிறது. தயிரை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளை திறம்பட எதிர்த்துப் போராட உதவுகிறது.
6. ஆரோக்கியமான முடி: தயிரில் புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்நிறைந்துள்ளதால், இது மயிர்க்கால்களை பலப்படுத்தி, முடி உதிர்வை குறைத்து ஆரோக்கியமான முடியின் வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன.
7. இரத்த சர்க்கரை அளவு: தயிரில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு, நிலையான குளுக்கோஸ் அளவை பராமரித்து சர்க்கரை அளவு சீராக இருப்பதை உதவி செய்கிறது.
மேற்கூறிய ஏழு நன்மைகளோடு உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதில் தயிரின் பங்கு பெருமளவு இருக்கும் என்பதால் வழக்கமாக தினந்தோறும் தயிரை சாப்பிட்டு பலன் பெறுவோம்.