
ஃபிட்டாக இருப்பதற்கு வயது ஒரு தடை கிடையாது. எப்போது நாம் ஃபிட்டாக இருக்க விரும்புகிறோமோ அப்போதே அதற்கான முயற்சிகளையும் தொடங்கி விட வேண்டும். எழுபது வயதுக்கு மேல் ஃபிட்டாக இருப்பதற்கு சீரான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவும் அவசியம். அத்துடன் போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்வதும் 70 வயதுக்கு மேல் ஃபிட்டாக இருக்க உதவும்.
1. சீரான உணவு பழக்கம்
முட்டை, பால், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
2. காய்கறிகள் மற்றும் பழங்கள்
விட்டமின்களும், தாதுக்களும், நார்ச்சத்தும் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை போதுமான அளவு உணவில் எடுத்துக் கொள்வது அவசியம்.
3. முழு தானியங்கள்
முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
4. கொழுப்பு பொருட்கள்
குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், மீன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். சமைப்பதற்கு அளவான அதே சமயம் ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்தவும்.
5. நீரேற்றமாக வைப்பது
உடலுக்குத் தேவையான, போதுமான அளவு தண்ணீர் அருந்துவது சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அத்துடன் மலச்சிக்கல் இன்றி இருக்கவும் உதவும்.
6. உடற்பயிற்சி மற்றும் ஓய்வு
மிதமான வேகத்தில் நடை பயிற்சி, நீச்சல், யோகா போன்ற பயிற்சிகளை செய்யலாம். தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்கி உடலுக்கும் மனதிற்கும் ஓய்வைக் கொடுக்கலாம். இவை நம் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
7. பழக்கவழக்கங்கள்
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தேவையற்ற தீய பழக்கங்களான புகை பிடிப்பதை தவிர்ப்பதும், மது அருந்துவதை தவிர்ப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
தியானம், யோகா போன்ற மன அழுத்தத்தை குறைக்க உதவும் செயல்களை பழக்கப்படுத்திக் கொள்வதும் நல்லது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம். மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தமின்றி வாழ்க்கையை ரசித்து வாழ முடியும்.
எப்போதும் சோம்பி இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுவது நல்லது. இதற்கு தினமும் சிறிது நேரம் நடை பயிற்சி மேற்கொள்வது உதவும். ஆரோக்கியமான எடையை பராமரிப்பது நம்மை சுறுப்பாக இருக்க வைக்கும். எலும்பு ஆரோக்கியத்தையும், தசை வலிமையையும் பாதுகாக்கவும் உதவும்.
வாரத்திற்கு இரண்டு நாட்களாவது தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யும் பொழுது வலி இருந்தால் உடனடியாக நிறுத்தி விட்டு தகுந்த மருத்துவரை கலந்தாலோசித்து பிறகு உடற்பயிற்சியைத் தொடரலாம். உடல்நல பரிசோதனைகளைத் தவறாமல் செய்து கொள்ளவும். வருடத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வருமுன் காக்க உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)